Wednesday, May 30, 2018

கம்பு தோசை | சிறுதானிய தோசை | Kambu Dosai

கம்பு தோசை, ரொம்ப சத்தான மற்றும் சுவையான ஒரு தோசை.சிறுதானியங்களில் அதிக அளவில் சத்துகள் உள்ளன, நமது சமையலில் தொடர்ந்து சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு ரொம்ப நல்லது.  சிறுதானியங்களில் கஞ்சி மட்டும் செய்யாமல் இந்த மாதிரி வித்தியாசமாக தோசை செய்தால் வீட்டிலுள்ள பெரியவர்கள் முதல் குட்டிஸ் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. சதா தோசைக்கு செய்யும் எந்த சட்னி மற்றும் சாம்பாரும் இந்த தோசைக்கும் நன்றாக இருக்கும், இதற்கென்று தனியாக எதுவும் மெனக்கெட வேண்டாம். வாங்க இப்போ இந்த சத்தான தோசை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Kambu dosai

Preparation Time : 10 hr | Cooking Time : 30 minsMakes : 30 
Recipe Category: Dosai | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப் 
இட்லி அரிசி - 1 கப் 
உளுந்த பருப்பு - 1/2 கப் 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தோசை சுட தேவையானளவு 

செய்முறை
முதலில் கம்பை நன்கு கழுவி குறைந்தது 4-5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.அடுத்து இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஒரே பாத்திரத்தில் கழுவி  2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.இரண்டும் நன்கு ஊறிய பின் முதலில் அரிசி,உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.அடுத்து கம்பையும் அதே போல நன்கு நைசாக அரைத்து அரிசி உளுந்து அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்தி ஊற்றி வைத்து கொள்ளவும்.தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து விடவும். ஒரு மூடியால் பாத்திரத்தை மூடி 4-5 மணி நேரம் மாவை புளிக்க வைக்கவும்.மாவு புளித்த பின் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து தோசை ஊற்றும் பதத்திற்கு மாவை ரெடி பண்ணிக்கொள்ளவும். வழக்கம் போல் தோசை ஊற்றி எடுக்கவும்.சுவையான மற்றும் சத்தான கம்பு தோசை தயார்.குறிப்புக்கள் 
  • சதா தோசை மாவை விட இந்த மாவு சீக்கிரமே புளித்து விடும்.
  • இந்த தோசை மாவு நன்கு மெல்லிசாக ஊற்ற வரும் அதனால் தோசை நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்.

Read more »

பசலை கீரை பருப்பு கூட்டு

பசலை கீரை பருப்பு கூட்டு , சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. இது சாதம் மற்றும் சப்பாத்தி-யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பசலை கீரையில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது இதனை தொடர்ந்து சமையலில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. அதுமட்டுமின்றி இதில் பருப்பு சேர்வதால் நமக்கு தேவையான புரோத சத்தும் கிடைக்கும், அதனால் இந்த மாதிரி கூட்டு வகைகளை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது ரொம்ப நல்லது. வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Keerai Paruppu Kootu

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பசலை கீரை - 1 கட்டு  (சிறியது )
பாசிப்பருப்பு - 1/4 கப் 
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1/2
தக்காளி -1
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 3/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
பெருங்காயம் தூள் - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன் 
தாளிக்க 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 1 

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி அதை பிரஷர் குக்கரில் எடுத்து கொள்ளவும் , அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ளவும். அடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் கடலை பருப்பை எடுத்து கொள்ளவும் அதற்கும் தேவையானளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு 3 விசில் வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.வெங்காயம், தக்காளி மற்றும் கீரை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கொள்ளவும்.அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கிய பின் தக்காளியை போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து கீரையை சேர்த்து, அது நன்கு சுருங்கும் வரை வதக்கவும். பின்பு மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பாசிப்பருப்பை கரண்டியால் நன்கு மசித்து கொள்ளவும், பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை  கீரையில் சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக்கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கீரையில் சேர்த்து கொள்ளவும்.சுவையான பசலை கீரை பருப்பு கூட்டு, பரிமாறும் முன்பு நெய்யை சேர்த்து கொள்ளவும்.
குறிப்புகள் 

  • பாசிபருப்புக்கு பதில் துவரம் பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • உங்கள் தேவையான பதத்திற்கேற்ப தண்ணீரை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும்.



Read more »

Friday, May 25, 2018

முட்டையை அவிப்பது எப்படி??

முட்டையை அவிப்பது  என்ன அவ்வுளவு கஷ்டமா? இதற்கு ஒரு போஸ்ட்-ஆ அப்படினு நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக கஷ்டம் எல்லாம் இல்லை , ஆனால் சில நுணுக்கங்கள் உள்ளன அதை தெரிந்து வைத்து கொண்டால் ஒவ்வொரு முறையும் சரியான பதத்தில் முட்டையை அவித்து எடுக்கலாம். முட்டையை  தேவையான நேரம் வேகவைக்கவில்லை என்றால் மஞ்சள் கரு வேகாமல் தண்ணியாக இருக்கும்,அதே போல அதிக நேரம் வேகவைத்துவிட்டால் மஞ்சள் கருவை சுற்றி கருப்பு வளையம் வந்துவிடும். உங்களுக்கும் எப்படி நடந்த அனுபவம் இருந்தால் உங்களுக்கு இந்த ரெசிபி உபயோகமாக இருக்கும். ஒரு இரண்டு வருடமாக இந்த முறையில் தான் நான் முட்டையை அவிக்குறேன்,ஒவ்வொவொரு முறையும் அவித்த முட்டையை ஃபெர்பெக்டாக இருக்கு.

How to boil eggs??

Preparation Time : 30 mins | Cooking Time : 3 minsMakes :
Recipe Category: Basics | Recipe Cuisine: General
தேவையான பொருட்கள்
முட்டை - 3

செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வர விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதி வந்த பின் அதில் ஒவ்வொரு முட்டையாக மெதுவாக போடவும்.சரியாக 1 & 1/2 நிமிடம் முட்டையை கொதிக்க விட வேண்டும், பின் அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடியால் 30 நிமிடம் முட்டையை மூடி வைத்துவிடவும்.முட்டையின் ஓட்டை உரிப்பதற்கு முன், வெந்நீரை தூர ஊற்றி விட்டு , நல்ல குளிர்ந்த நீரில் ஒரு  2 நிமிடம் முட்டையை காட்டி எடுத்து முட்டையை உரித்தால் எளிதாக உரிக்க வரும்.சூப்பரா அவித்த முட்டை தயார்.
குறிப்புகள்

  • முட்டை மூழ்கும் அளவு தண்ணீர்  இருக்க வேண்டும்.
  • உரிப்பதற்கு முன் 30 நிமிடம் முட்டையை மூடி வைப்பது அவசியம்.

Read more »

Wednesday, May 23, 2018

ரவை உப்புமா

ரவை உப்புமா, ரொம்ப சுலபமாக, எளிதில் செய்யக்கூடிய ஒரு டிபன் ஐட்டம். நிறைய பேறு உப்புமா என்றாலே சாப்பாடே வேண்டாம் என்று பதறி ஓடுவார்கள், நானும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்தேன். எப்போ நானே சமைக்க ஆரம்பிச்சேனோ அப்போது இருந்துதான் உப்புமா ஐட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்தது என்று சொல்லுவதை விட அதன் அருமை புரிந்தது என்று சொல்லலாம். 
சிம்பிளான பொருட்களை கொண்டு மிக எளிதில் செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி என்று உப்புமாவை கண்டிப்பாக சொல்லலாம்.சின்ன சின்ன விசயங்களை கவனத்தில் கொண்டால் ஒரு சூப்பர் உப்புமாவை நீங்களும் செய்யலாம்,வாங்க இப்போ எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

Ravai Upma

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ரவை - 1/2 கப் 
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 அங்குலம் துண்டு 
துருவிய தேங்காய் - 1 & 1/2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை
முதலில் வெறும் வாணலில் ரவையை நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டாக வகுந்து கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் காய வைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம்,இஞ்சி ,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதி வர விட வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் ஒரு கையால் ரவையை தண்ணீரில் தூவி கொண்டே மற்றொரு கையால் கிளறவும். ஒரு 3-4 நிமிடத்தில் ரவை நன்கு வெந்து விடும் , பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு 2-3 நிமிடம் உப்புமாவை மெல்லிய தீயில் மூடி வைக்கவும்.சூப்பரான ரவை உப்மா தயார். பரிமாறும் போது கொத்தமல்லி இலை தூவி கொள்ளவும்.
குறிப்புக்கள் 
  • ரவையை தண்ணீரில் தூவி கொண்டே மற்றொரு கையால் கிளறவும், இல்லாவிட்டால் உப்புமா  கட்டிக்காட்டியாக ஆகிவிடும்.
  • தேங்காய் எண்ணெய் உப்புமாவிற்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
  • ரவையை வறுத்துக்கொள்வதால் உப்புமா கையில் பிசு பிசுவென்று ஒட்டாமல் வரும்.
  • இஞ்சி விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.



Read more »

மைக்ரோ வேவ் பால்கோவா | திரட்டி பால்

மைக்ரோ வேவ் பால்கோவா, சூப்பரா சீக்கரம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு. பாரம்பரியமாக பாலில் இருந்து செய்யக்கூடிய பால்கோவா-விற்கு மணிக்கணக்கில் அடுப்பு முன்னாடி நின்று கிளறி கொண்டு இருக்க வேண்டும். ஆனா இப்போ நாம கண்டென்ஸ்ட் மில்க் மில்க் கொண்டு மைக்ரோ வேவில் 5-6 நிமிடத்தில்  பால்கோவா எப்படி செய்வதுனு பார்க்க போகிறோம். கிட்டத்தட்ட பாலிலிருந்து செய்த பால்கோவா போலவே சுவையாக இருக்கும். வாங்க ரெசிபிக்கு போகலாம்.

Microwave Palkova

Preparation Time : 1 hr | Cooking Time : 7 minsServes :
Recipe Category: Sweets | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின் 
தயிர் - 1 & 1/2 டீஸ்பூன் 
நெய் - 3 டீஸ்பூன் 


செய்முறை
முதலில் தேவையான பொருட்களை மற்றும் மைக்ரோ வேவ் ஓவெனில் வைக்க கூடிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.கண்டென்ஸ்ட் மில்க்-யை மைக்ரோ வேவ் பாத்திரத்தில் ஊற்றவும் அடுத்து தயிர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.மைக்ரோ வேவ் ஓவெனில் 2 நிமிடம் வைக்கவும், பின் பாத்திரத்தை எடுத்து அதில் 1 டீஸ்பூன் நெய்யை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து திரும்பியும் மைக்ரோ வேவ் ஓவெனில் 2 நிமிடம் வைக்கவும், முன்பு போல பாத்திரத்தை எடுத்து அதில் 1 டீஸ்பூன் நெய்யை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.கடைசியாக திரும்பியும் மைக்ரோ வேவ் ஓவெனில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும், எப்போது பால்கோவா நன்றா கெட்டியாக வந்து இருக்கும்.அதில் மீதி இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி கொள்ளவும். பால்கோவா ஓரளவு ரெடி ஆகிடுச்சு, ஆனால் இன்னும் கொஞ்சம் கலர் வந்தால் நல்ல இருக்கும் அதனால் மைக்ரோ வேவ் ஓவெனில் இன்னும் 1 நிமிடம் வைத்து எடுத்தேன். அவ்வளவு தான் பால்கோவா சூப்பரா ரெடி ஆகிடுச்சு.பால்கோவா தனி தனியாக பேக் பண்ணனும் நினைச்சீங்கனா இதே மாதிரி பட்டர் பேப்பரில் பால்கோவா கொஞ்சம் ஆறிய பின் பேக் பண்ணிக்கொள்ளவும்.சுவையான மைக்ரோ வேவ் பால்கோவா தயார்.

குறிப்புக்கள் 
  • நன்கு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், மைக்ரோ வேவில் வைக்கும் போது கண்டென்ஸ்ட் மில்க் பொங்கி வரும். சிறிய பத்திரமாக இருந்தால் எல்லாம் கீழே சிந்தி விடும்.
  • ஒவ்வொரு மைக்ரோ வேவ் ஒவேனும் கொஞ்சம் மாறுபடும், அதனால் பக்கத்திலே இருந்து பார்த்து கொள்ளவும்.
  • கண்ணாடி பாத்திரம் பயன்படுத்துவதால் கண்டென்ஸ்ட் மில்க் பொங்கி வந்தால் எளிதில் பார்த்து மைக்ரோ வேவை அணைக்க முடியும்.
  • தேவைப்பட்டால் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.


Read more »

Tuesday, May 22, 2018

நன்னாரி சர்பத்

நன்னாரி சர்பத், சுவையான மற்றும் உடல் சூட்டை தணிக்கும் ஒரு குளிர்பானம்.இயற்கையிலே நன்னாரி வேரில் உடல் சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் உள்ளது, வெயில் காலத்தில் இதனை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. நன்னாரி வேர் கிடைத்தால் வீட்டிலே நன்னாரி சிரப் செய்யலாம், நான் இருக்கும் இடத்தில் நன்னாரி வேர் கிடைவில்லை அதனால் கடையில் கிடைக்கும் நன்னாரி சிரப்-யை தான் இந்த சர்பத் -க்கு பயன்படுத்தியுள்ளேன் அதுவும் சூப்பரா இருந்தது. வாங்க இப்போ எப்படி நன்னாரி சர்பத் செய்வது பாக்கலாம்.

Nannari Sharbath

Preparation Time : 5 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் - 1
நன்னாரி சிரப்  - 3 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1 & 1/2 கப் 
ஐஸ் கட்டி - தேவைகேற்ப 


செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும்.அடுத்து அதில் நன்னாரி சிரப் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.நன்னாரி சர்பத் தயார்.தேவைக்கேற்ப ஐஸ் கட்டி போட்டு பரிமாறவும்.
குறிப்புக்கள் 
  • எலுமிச்சை பழம் புளிப்பிற்கு தகுந்தாற்போல் நன்னாரி சிரப் சேர்த்து கொள்ளவும்.
  • பரிமாறும் போது ஐஸ் கட்டி போட்டு கொள்ளவும். இல்லையென்றால் தண்ணி விட்டு போய்விடும்.

Read more »