Monday, May 14, 2018

கூழ் வத்தல் | அரிசி வத்தல்

கூழ் வத்தல், அரிசியில் செய்யப்படும் இந்த வத்தல் ரொம்ப சுவையாக இருக்கும் . வெயில்காலத்தில் செய்து வைத்துக்கொண்டால் வருடம் முழுதும் பயன்படுத்தி கொள்ளலாம். கலவை சாதம் முதல் மீல்ஸ் சாப்பாடு வரை எதனுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். நன்கு வெயிலடிக்கும் நாட்களில் இந்த வத்தலை செய்யுங்கள், இரண்டே நாட்களில் காய வைத்து எடுத்துவிடலாம். இது கடைகளில் கிடைக்கும் வத்தலை விட மிக ருசியானது. மேலும் கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான வத்தலில் தேவைக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டு இருக்கும், அது அடிக்கடி உண்பது  உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல ,வீட்டிலே வத்தல் செய்வதால் நாம் தேவைக்கேற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்து கொள்ளலாம். வாங்க இப்போ எப்படி  கூழ் வத்தல் செய்வதுனு பார்க்கலாம் .

  

Koozh Vathal / அரிசி வத்தல்

Preparation Time : 2 days | Cooking Time : 25 minsMakes : 4 Cups 
Recipe Category: Preserve | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1 கப் 
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 1 கப்(ஊறவைக்க ) + 4 கப் 
உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை
முதல்நாள் இரவே அரிசியை நன்கு கழுவி ஒரு கப் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை மிக்ஸில் அரிசி, பச்சை மிளகாய் மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து, தேவைக்கேற்ப ஊறவைத்த தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும் .ஊறவைத்த தண்ணீர் மீதம் இருந்தால் அதையும் அரைத்த மாவுடன் ஊற்றி ஒரு பெரிய பாத்திரத்துக்கு மாற்றவும். அதில் 4 கப் தண்ணீரை சேர்த்து அடுப்பில் மெல்லிய தீயில் வைக்கவும் .தேவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.கைவிடாமல் கலந்துவிட்டு கொண்டே இருக்கவும் . 20- 25 நிமிடத்தில்  மாவு நன்கு கூழ் போல பளபளவென்று வரும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும். வத்தல் ஊற்றுவதற்கு வசதியாக கூழை சிறு சிறு பாத்திரத்துக்கு மாற்றி கொள்ளவும். நன்கு வெயிலடிக்கும் இடத்தில் ஒரு சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணியை விரித்துக்கொள்ளவும் .ஒரு ஸ்பூன் கொண்டு கூழை எடுத்து வரிசையாக ஊற்றவும் .இதனை ஒரு நாள் முழுதும் அப்படியே காய விடவும்.சாயந்தரம் நேரம் ஒரு பக்கம் வத்தல் நன்கு காய்ந்திருக்கும் , ஒவ்வொரு வத்தலாக துணியில் இருந்து பிரித்து எடுக்கவும். எடுப்பதற்கு வரவில்லையென்றால் சிறுது தண்ணீர் தெளித்து கொள்ளவும். அணைத்து வத்தலையும் ஒரு பெரிய தட்டில் பரப்பி இரவில் உலர விடவும்.மறுநாள் காலை மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.  நன்கு வெயிலடித்தால் இரண்டு நாளில் காய்ந்து விடும். தேவைப்பட்டால் கூட ஒரு நாள் காய வைத்து கொள்ளவும்.வத்தல் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் காய வைத்துக்கொள்ளவும். தேவைக்கேற்ப பொரித்து எடுத்துக்கொள்ளவும் .சுவையான வீட்டிலே செய்த கூழ் வத்தல் தயார்.
குறிப்புக்கள் 
  • கொடுத்துள்ள அளவிற்கு 1/2 டீஸ்பூன் முதல் 3/4  டீஸ்பூன் வரை உப்பு போதுமானதாக இருக்கும் . கூழை சுவைத்துப்பார்த்தால் அவ்வளவாக உப்பு தெரியாது அதற்காக மேற்கொண்டு உப்பு போட வேண்டாம். வத்தல் காய்ந்த பின் சரியாக இருக்கும்.
  • ஒரு இரவு முழுவதும் அரிசியை ஊறவைப்பதால் லேசாக ஒரு புளிப்பு சுவை வரும். அது வத்தலுக்கு மேலும் சுவையை கொடுக்கும்.
  • அரிசியை பொறுத்து தண்ணீரின் தேவை சில நேரம் கூடும், அதனால் ஒரு 2 கப்  சூடு தண்ணீரை  தயாராக வைத்து கொள்ளவும். கூழ் ரொம்ப கெட்டியானால் சூடு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
  • காலையில் வெயில் வரும் சமயம் வத்தல் ஊற்றுங்கள், ரொம்ப சுலபமாக இருக்கும்.

No comments:

Post a Comment