Sunday, July 29, 2018

பீட்ரூட் புலாவ் | பீட்ரூட் சாதம் | Beetroot Rice | Beetroot Pulav

பீட்ரூட் புலாவ், சுவையான,சத்தான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ்.வேகவைத்த சாதம் இருந்தால் போதும்,ஒரு 20 நிமிடத்தில் இந்த பீட்ரூட் புலாவை செய்து விடலாம். குட்டிஸ் லஞ்ச் போஸ்-க்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு புலாவ், பார்ப்பதற்கும் அட்டகாசமாக இருப்பதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இதற்கு சைடு டிஷ் கிரேவி எதுவும் தேவையில்லை சிம்பிளா ஒரு வெங்காய தயிர் பச்சடி இருந்தாலே  போதும். வாங்க இப்போ இந்த பீட்ரூட் புலாவ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பீட்ரூட் புலாவ் | பீட்ரூட் சாதம் | Beetroot Rice | Beetroot Pulav

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பீட்ரூட்  - 1 கப்(துருவியது )  
வேகவைத்த பாசுமதி அரிசி  - 2 கப்
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
லெமன்  -1/2 
கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன் 
கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
கறிவேப்பில்லை - 1 கொத்து
முந்திரி பருப்பு - 4/5 
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 1
பிரியாணி இலை -1
எண்ணெய் -2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் பீட்ரூட்யை துருவி கொள்ளவும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை  மெலிதாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலில் எண்ணெய்  சேர்த்து அது சூடானபின் அதில் பட்டை,கிராம்பு,பிரியாணி இலை  மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு 30 நொடி வதக்கி கொள்ளவும்.பின் அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து  வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ,வெங்காயம்  பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு பீட்ரூட் வேகும் வரை வதக்கி கொள்ளவும்.வேகவைத்த அரிசியை கொஞ்சம் நேரம் ஆறவிடவும். பீட்ரூட் வெந்த பின் அதில் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு,வேகவைத்த சாதம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தை மெதுவாக எல்லாம் ஒன்றாக சேரும்வரை கிளறி விடவும்.கடைசியாக கொத்தமல்லி இலையை மேலே தூவி கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் புலாவ் ரெடி !!! வெங்காய தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.
குறிப்புக்கள்
  • மிதமாகி போன சாதம் கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • பீட்ரூட் இனிப்புக்குக்கேற்ப பச்சை மிளகாய் கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.
  • விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் நெய் கூட சேர்த்து கொள்ளலாம்,அது இன்னும் சுவையாக இருக்கும்.
Read more »

Wednesday, July 25, 2018

சேமியா பிரியாணி | Semiya Biryani

சேமியா பிரியாணி, சுவையான மற்றும் எளிதில் சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு பிரியாணி. அரிசியில் பிரியாணி செய்து போர் அடிக்குதா ?? அப்போ கொஞ்சம் விசித்தியாசமாக இந்த சேமியா பிரியாணி செய்து பாருங்கள்.எப்போவும் செய்யும் பிரியாணியை விட இதை  செய்ய பாதி நேரம்  தான் ஆகும் ஆனால் சுவையும்,மணமும் அட்டகாசமாக இருக்கும். இதற்கு சைடு டிஷ் கிரேவி எதுவும் தேவையில்லை சிம்பிளா ஒரு வெங்காய தயிர் பச்சடி இருந்தால் போதும், லஞ்ச்/டின்னர் -க்கு அல்லது டிபன் பாஸ்-க்கு இப்படினு எப்போ வேணும்னாலும் செய்யக்கூடிய ஒரு சூப்பர் டிஷ், வாங்க இப்போ இந்த சேமியா பிரியாணியை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

சேமியா பிரியாணி | Semiya Biryani

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Biryani | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சேமியா - 1/2 கப்  
காய்கறிகள் - 1 கப்(உருளை,கேரட்,பட்டாணி )
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
எண்ணெய் -1 டீஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன்  
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் உருளைகிழங்கு மற்றும் கேரட் இரண்டையும் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் அதனுடன் ஊற வைத்த பட்டாணியை  சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.ஒரு வாணலில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அது சூடானபின் அதில் பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு 30 நொடி வதக்கி கொள்ளவும்.பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கொள்ளவும்.கூடவே மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து  தக்காளி நன்கு வதக்கவும்,அடுத்து அதில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து கொள்ளவும்.தேவையான தண்ணீர்,கொத்தமல்லி  மற்றும் உப்பு சேர்த்து கொதி வர விடவும். கொதித்த பின் அதில் வறுத்த சேமியாவை சேர்த்து,நன்கு ஒரு முறை கலந்து மூடியால் மூடி விடவும்.தீயை மெலிதாக வைக்கவும்.ஒரு 4- 5 நிமிடத்தில் சேமியா நன்கு வெந்துவிடும். அடுப்பை அணைத்துவிட்டு கரண்டியால் சேமியாவை மெதுவாக கிளறி விடவும்.சுவையான சேமியா பிரியாணி தயார். வெங்காய தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.
குறிப்புக்கள்

  • விருப்பப்பட்டால் கொஞ்சம் புதினா மற்றும் முந்திரி பருப்பு  கூட சேர்த்து கொள்ளலாம். இன்னும் சுவையாக இருக்கும்.
  • காய்கறிகளை ரொம்ப குழைவாக வேகவைக்க வேண்டாம். ஒரு முக்காப்பதம் வெந்திருந்தால் போதும் மீதி சேமியாவுடன் சேர்த்து வெந்து விடும்.
  • நான் வறுத்த சேமியாவை இதில் பயன்படுத்தியுள்ளேன்,வறுக்காத சேமியாவாக இருந்தால் ஒரு 1/2 டீஸ்பூன் நெய்யில் வறுத்து சேர்த்து கொள்ளவும். அப்போதுதான் உதிரி உதிரியாக வரும்.

Read more »

Tuesday, July 24, 2018

மஷ்ரூம் சுத்தம் செய்வது எப்படி?? | How to clean and cut Mushroom ??

மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வது ?? நீங்க புதுசா மஷ்ரூம் குக் பண்ண போறீங்க அல்லது சமையலே இப்போ தான் கற்றுகொள்ளுறீங்க அப்படினா உங்களுக்கு மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வதுனு அப்படிக்குற இந்த போஸ்ட் ரொம்ப உதவியாக இருக்கும்.சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் மஷ்ரூம் சமைச்சது கிடையாது அதனால் நான் குக் பண்ண ஆரம்பிச்சபோது  இந்த மஷ்ரூம் எப்படி கிளீன் பண்றதுனு நிறைய சந்தேகம் எனக்கு இருந்துச்சு,அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக படிச்சு தெரிச்சுக்கிட்டேன், நான் கத்துக்கிட்டதை எப்போ உங்களுக்கு ஷேர் பண்றேன் ,வாங்க மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வது பார்க்கலாம்.

மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வது | How to clean and cut Mushroom

Preparation Time : 10 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Basics | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் - 1 பாக்கெட் 

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து கொள்ளவும், அதில் மஷ்ரூம்-யை போட்டு, ஒவ்வொரு மஷ்ரூம்-ஆகா விரல்களால் தேய்த்து மேலே இருக்கும் மண் மற்றும் தூசி போகும் வரை கழுவிக்கொள்ளவும்.அதே போல அணைத்து மஷ்ரூம்-யும் கழுவி எடுத்துக்கொள்ளவும். மஷ்ரூம் நிறம் ரொம்ப பழுப்பாக இருந்தால், மேலே உள்ள தோல் போன்ற பகுதியை உரித்து எடுத்துவிடவும். அதற்கு பின்வரும் படங்களை பாருங்கள்,ஈஸியாக புரியும்.இது கட்டாயம் இல்லை ரொம்ப நிறம் பழுப்பாக இருந்தால் மட்டும் உரித்தால் போதும்.
அடுத்து காம்பின் நுனி பகுதியை மட்டும் லேசாக நறுக்கி கொள்ளவும். இப்போது மஷ்ரூம் தயார்,இனிமேல் உங்களுக்கு விருப்பப்பட்ட சைஸ்யில் மஷ்ரூம்-யை நறுக்கி கொள்ளவும்.அவ்வளவு தான் மஷ்ரூம் இப்போ குக் பண்ண தயார்.
குறிப்புக்கள்

  • உங்களுக்கு மஷ்ரூம் பின்னாடி முடி மாதிரி கருப்பாக இருக்கும் பகுதியும் பிடிக்கவில்லை என்றால்,சிறிய துண்டுகளாக நறுக்கும் முன்பு அதையும் நீக்கி கொள்ளவும் 
  • மஷ்ரூம்-யை ரொம்ப நேரம் தண்ணிரில் ஊற வைக்காதீர்கள்.மஷ்ரூம் ரொம்ப சீக்கரம் தண்ணீரை இழுத்து கொள்ளும்.

Read more »

Sunday, July 22, 2018

வாழைக்காய் வறுவல் | Vazhakkai Varuval

வாழைக்காய் வறுவல், சுலபமாக செய்யக்கூடிய ஒரு வறுவல் ரெசிபி இது. இந்த வாழைக்காயை வறுவல் சாம்பார் மற்றும் புளி குழம்புடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். நன்கு மொறுமொறுவென்று இருப்பதால் குட்டிஸ் கூட இதனை விரும்பி சாப்பிடுவாங்க, வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வாழைக்காய் வறுவல் | Vazhakkai Varuval

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வாழைக்காய்  - 1 
மிளகாய் தூள்  - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - 1 & 1/2 டீஸ்பூன்


செய்முறை
முதலில் வாழைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து விடவும்.தண்ணீரிலிருந்து வாழைக்காயை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கொத்தமல்லி தூள்,கரம் மசாலா,உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய்  சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அதனை ஒரு 10 நிமிடம் ஊற விடவும்.பின் வாணலில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி,சூடான பின்,அதில் வாழைக்காயை போட்டு இரண்டு பக்கமும் நன்கு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து எடுக்கவும்.சுவையான வாழைக்காயை வறுவல் தயார்.
குறிப்புக்கள் 
  • வாழைக்காயை மெலிதாக நறுக்கி கொள்ளவும்,அப்போதுதான் ரொம்ப சீக்கரம் வேகும்.
  • மெல்லிய தீயில் வாழைக்காயை வறுக்கவும், இல்லாவிட்டால் அடிபிடித்து விடும்.

Read more »

Wednesday, July 18, 2018

ராகி தோசை | கேழ்வரகு தோசை | Instant Ragi Dosai

ராகி/கேழ்வரகு தோசை, சத்தான மற்றும் சுவையான இந்த தோசையை நொடியில் செய்துவிடலாம். இந்த தோசைக்கு மாவு அரைக்கவோ அல்லது புளிக்கவைக்கவோ தேவையில்லை, உடனடியாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் தோசை. நிறைய சத்துள்ள சிறுதானியங்களை நமது உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது ரொம்ப நல்லது,அதனை வழக்கமான களி  அல்லது கஞ்சியாக இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமாக தோசையாக  செய்து கொடுத்தால் வீட்டில் பெரியவங்க முதல் குட்டிஸ் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க இப்போ இதை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ராகி தோசை | கேழ்வரகு தோசை | Instant Ragi Dosai

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsMakes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1/2 கப் 
கோதுமை மாவு - 1/4 கப் 
வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது )
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - தோசைக்கு தேவையானளவு


செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தேவையானளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு தண்ணீராக கலந்து வைத்து கொள்ளவும்.தோசை கல்லை காய வைத்து, கரைத்து வைத்துள்ள மாவை பரவலாக ஊற்றவும். தோசையை சுற்றி தேவையானளவு எண்ணெய் சேர்க்கவும். இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.சுவையான மற்றும் சத்தான ராகி தோசை தயார்.
குறிப்புக்கள் 
  • இந்த தோசையை வெங்காயம் சேர்க்காமலும் செய்யலாம்.
  • மாவின் தரத்தை பொறுத்து தண்ணீர் கூடவோ அல்லது குறையவோ தேவைப்படும்.

Read more »

Tuesday, July 17, 2018

வேர்க்கடலை சட்னி | Peanut Chutney

வேர்க்கடலை சட்னி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் சட்னி. இது இட்லி,தோசை மற்றும் உப்மா வகைகளுக்கு ரொம்ப நன்றாக இருக்கும்.வறுத்த வேர்க்கடலை ரெடியாக இருந்தால் ஒரு 2 நிமிடத்தில் இந்த சட்னி செய்துவிடலாம். வாங்க எப்போ இந்த சுவையான வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வேர்க்கடலை சட்னி | Peanut Chutney

Preparation Time : 5 mins | Cooking Time : 5 minsServes :
Recipe Category: Chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1/4 கப் (வறுத்தது )
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
காய்த்த மிளகாய் - 2
பூண்டு - 1 பல்
புளி - சிறுதளவு 
உப்பு - தேவையானளவு 
தாளிக்க 
எண்ணெய்  -1 டீஸ்பூன் 
கடுகு மற்றும் உளுந்த பருப்பு  - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 


செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை, பூண்டு,மிளகாய் மற்றும் புளி சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.அடுத்து அதில் தேங்காய்,உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
குறிப்புக்கள் 
  • நன்கு வறுத்த மற்றும் தோல் நீக்கிய வேர்க்கடலையை பயன்படுத்தவும்.
  • உங்கள் தேவைக்குக்கேற்ப மிளகாயை சேர்த்து கொள்ளவும்.

Read more »