Wednesday, August 29, 2018

சீடை | தேங்காய் சீடை | கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி | Seedai | Thengai Seedai

சீடை, அரிசி மாவில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான பலகாரம்/தின்பண்டம். இதனை வீட்டில் செய்வது ரொம்ப சுலபம்,சுவையும் அட்டகாசமாக இருக்கும். இன்னைக்கு நான் ஷேர் பண்ற சீடை ரெசிபி எங்க அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது. எங்க வீட்டில் சீடை செய்யும் போது அதில் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்ப்போம்,அது சீடைக்கு நல்ல ஒரு மணத்தையும்,சுவையையும் கொடுக்கும். வருகின்ற கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்களும் இந்த சுவையான சீடையை செய்து பாருங்கள். 

சீடை | தேங்காய் சீடை | கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி

Preparation Time : 20 mins | Cooking Time : 20 minsMakes : 1 & 1/2 cup 
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப் 
துருவிய தேங்காய் - 1/4 கப் 
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீ ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
தண்ணீர் - தேவையானளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானளவு 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,தேங்காய் துருவல்,வெண்ணெய்,சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அதில் தேவையானளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும். பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஒரு வாணலில் காய வைத்துக்கொள்ளவும்.எண்ணெய் சூடான பின் அதில் மாவு உருண்டைகளை போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்.சுவையான மற்றும் மொறுமொறுப்பான சீடை தயார்.
குறிப்புக்கள்:
  • மாவை உருண்டைகளாக உருட்டும் போது அதிகம் அழுத்தம் குடுக்காமல் உருட்டி கொள்ளவும் 
  • தேங்காய் துருவல் நைசாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும், பெரிய துண்டுகள் இருந்தால் சீடை வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் 
  • மெல்லிய தீயில் பொரித்து எடுக்கவும்.

Read more »

Monday, August 27, 2018

ராகி கொழுக்கட்டை| கேழ்வரகு கொழுக்கட்டை | Ragi Kozhukattai

ராகி கொழுக்கட்டை, ஒரு சுவையான மற்றும் சத்தான ஈவினிங் ஸ்னாக்ஸ். சிறு தானியங்களில் நமது உடலுக்கு தேவையான சத்துகள் நிறைய உள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவது ரொம்ப நல்லது. சிறுதானியங்களை கொண்டு தோசை, கூழ்,களி இப்படி செய்து போர் அடிக்குதா ?? கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி  கொழுக்கட்டை செய்து பாருங்க, சாயங்காலம்  ஸ்னாக்ஸ்-ஆக சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும். அதுமட்டுமின்றி வீட்டில் சுகர் இருக்குற பெரியவங்க அரிசியில் செய்த கொழுக்கட்டை சாப்பிட்டால் சுகர் அதிகம் ஆகிவிடுமோ பயப்படுவாங்க, அவங்களுக்கும் இந்த ராகி கொழுக்கட்டை ரொம்ப ஏற்ற ஒரு ரெசிபி!!! வாங்க இப்போ இந்த ராகி கொழுக்கட்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ராகி கொழுக்கட்டை| கேழ்வரகு கொழுக்கட்டை | Ragi Kozhukattai

Preparation Time : 20 mins | Cooking Time : 10 minsServes :
Recipe Category: Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1/2 கப் 
தண்ணீர் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
வறுத்து பொடி செய்து கொள்ள 
காய்ந்த மிளகாய் - 1 
கடலை பருப்பு  - 1 டீஸ்பூன் 
உளுந்த பருப்பு - 3/4 டீஸ்பூன் 


செய்முறை
முதலில் ராகி மாவை வெறும் வாணலில் போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.அதில் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதை மாவில் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.சிறு சிறு உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளவும்.அதனை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் 8-10 நிமிடம் வேக வைக்கவும்.இடைப்பட்ட நேரத்தில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸில் கொரகொரவென்று பொடித்து எடுத்துக்கொள்ளவும்.அடுத்து தாளிக்க ஒரு வாணலில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு,உளுந்து மற்றும் கறிவேப்பில்லை தாளித்த பின் அதில் பொடித்த பொடியை சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.பின் வேகவைத்து எடுத்த கொழுக்கட்டையை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான ராகி கொழுக்கட்டை தயார் .
குறிப்புக்கள் 
  • ராகி மாவை நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  • உங்கள் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும். 

Read more »

Friday, August 24, 2018

கார சட்னி | வெங்காய சட்னி | Kara Chutney | Onion Chutney

கார சட்னி / வெங்காய சட்னி, எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான சட்னி,இது  இட்லி,தோசை மற்றும் பணியாரம் வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த கார சட்னி உணவகங்களில் இட்லி மற்றும் தோசைக்கு சைடு டிஷ் ஆக தரப்படும் கார சட்னி போலவே இருக்கும்.உங்களுக்கு உணவகங்களில் கிடைக்கும்  கார சட்னி பிடிக்குமென்றால் இந்த கார சட்னி ரெசிபியை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்கள். தேங்காய் இல்லாமல் செய்யப்படும் சட்னியில்  எனக்கு ரொம்ப  பிடித்த ஒரு சட்னி இது. வாங்க இப்போ இந்த சூப்பர் கார சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

கார சட்னி | வெங்காய சட்னி | Kara Chutney | Onion Chutney

Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsServes : 2 to 3 
Recipe Category: chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 2 (சிறியது )
தக்காளி - 1 
பூண்டு - 3 பல் 
காய்ந்த மிளகாய் - 3
கடலை பருப்பு  - 1/2 டேபிள் ஸ்பூன் 
கேரட் - சிறு துண்டு (தேவைப்பட்டால் )
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து.


செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு வாணலில் நல்லெண்ணெய்  ஊற்றி காய்ந்த பின் அதில் கடலைப்பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும் , பின் அதில் வெங்காயம் மற்றும் சிறுதளவு உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.பின் தக்காளி மற்றும் கேரட் சேர்த்து நன்கு இரண்டையும் வதக்கி கொள்ளவும். அடுப்பை அணைத்து சிறுது நேரம் ஆறவிடவும்.ஆறியபின் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு  தேவையானளவு உப்பும் சேர்த்து நன்கு நைசாக(தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் ) அரைத்து கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும்.நொடியில் கார சட்னி தயார்.
குறிப்புக்கள் 
  • சட்னியின் நிறம் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் நிறத்தை பொருத்து கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
  • கேரட் சட்னிக்கு ஒரு லேசான இனிப்பு சுவையை கொடுக்கும்,அது இந்த சட்னிக்கு நன்றாக இருக்கும்.
  • கடலை பருப்பு சட்னிக்கு நல்ல கெட்டித்தன்மையை கொடுக்கும்,அதனால் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

Read more »

Tuesday, August 21, 2018

ரவை தோசை | ரவா தோசை | Rava Dosa with Dosa Batter

ரவை தோசை, சுலபமாக மீந்து போன தோசை மாவை கொண்டு செய்ய கூடிய ஒரு சுவையான ரவா தோசை . எங்க வீட்டில் எப்போதெல்லாம் தோசை மாவு கம்மியா இருக்கோ அப்போ அநேகநேரம் இந்த தோசை தான் டின்னர்-ஆ இருக்கும். சதா ரவா தோசை போல் இது ரொம்ப மெல்லிசாக இருக்காது ஆனா சுவை அட்டகாசமாக இருக்கும். இதில் வெங்காயம் மற்றும் கடலை பருப்பு எல்லாம் தாளித்து போடுவதால் இந்த தோசையை ரொம்ப மெல்லிசாக ஊற்ற முடியாது ஆனால் அந்த தாளிப்பு தான் இந்த தோசைக்கு மேலும் சுவையை கொடுக்குது.வாங்க இப்போ இந்த ரவா தோசை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

ரவை தோசை | ரவா தோசை

Preparation Time : 30 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Dosai | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப் 
ரவை - 1/2 கப் 
கொத்தமல்லி இலை - சிறுதளவு 
உப்பு - தேவைகேற்ப 
தாளிக்க 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன் 
வெங்காயம் - 1(சிறுது )
கறிவேப்பில்லை - 1 கொத்து


செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து தேவையானளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை ஊற்றும் பதத்திற்கு மாவை கரைத்து வைத்துக்கொள்ளவும்.வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும்.அடுத்து கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்த பின்,வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேப்பில்லை மற்றும் சிறுதளவு உப்பு  சேர்த்து வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.வதக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து கொள்ளவும் கூடவே தேவையானளவு கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான் மாவு தயார். அடுத்து தோசை உற்ற தோசை கல்லை காய வைத்துக்கொள்ளவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்த்து கொள்ளவும்.சீக்கரம் வேக ஒரு மூடியால் மூடி வைத்து  ஒரு 2 நிமிடம் வேகவிடவும், பின் தோசையை திருப்பி அடுத்த பக்கமும் வேக விட்டு எடுத்து கொள்ளவும்.சுவையான ரவா தோசை தயார் !!! சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
குறிப்புக்கள் 

  • எல்லா பொருட்களும் தாளித்து சேர்த்துள்ளதால் இந்த தோசையை ரொம்ப மெல்லிசாக ஊற்ற முடியாது.
  • அதனால் தீயை குறைய வைத்து முடிந்தளவு தோசையை மெல்லிசாக ஊற்றவும்.
  • கடலை பருப்பு உங்களுக்கு தோசையில் பிடிக்காது என்றால் அதை தவிர்த்துவிடலாம். 

Read more »

Friday, August 17, 2018

பன்னீர் ப்ரைட் ரைஸ் | Paneer Fried Rice

பன்னீர் ப்ரைட் ரைஸ், சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ப்ரைட் ரைஸ். இப்போது எல்லாம் குட்டிஸ் முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் indochinese ஐட்டம் என்றால் ரொம்ப பிடிக்குது. அதை அடிக்கடி கடையில் வாங்காமல் நம்ம வீட்டிலே ரொம்ப சுலபமாக குறைந்த நேரத்தில் செய்துவிடலாம்.கடையில் சாப்பிடுவதை விட வீட்டிலே செய்து சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது. வேகவைத்த சாதம் இருந்தால் போதும் சட்டென்று ஒரு 20 நிமிடத்தில் இந்த ப்ரைட் ரைஸ் செய்துவிடலாம். அது மற்றுமின்றி இந்த  ப்ரைட் ரைஸ்-யை மிதமாகி போன சாதத்தில் கூட செய்யலாம்,ரொம்ப நன்றாக இருக்கும்.வாங்க எப்போ இந்த பன்னீர் ப்ரைட் ரைஸ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பன்னீர் ப்ரைட் ரைஸ் | Paneer Fried Rice

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rice | Recipe Cuisine: IndoChinese
தேவையான பொருட்கள்
பாஸ்மதி சாதம் - 3 கப் 
பன்னீர் - 1 கப் 
காய்கறிகள் - 3/4 கப்(கேரட்,முட்டைகோஸ் மற்றும் குடை மிளகாய் )
பூண்டு - 2 பல் 
வெங்காய தாள் - 3
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்  
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை  உதிரி உதிரியாக வேகவைத்து கொஞ்சம் நேரம் ஆறவிடவும். அடுத்து காய்கறிகளை நன்கு மெலிதாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்,பூண்டை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காய தாளின் வெள்ளை நிற பகுதியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பன்னீரை சிறுசிறு சதுரமாக நறுக்கி பயன்படுத்தும் வரை வெந்நீரில்  போட்டு வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,சூடானபின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.பூண்டு நன்கு வாசம் வரும் வரை வதக்கி கொள்ளவும் ,அடுத்து வெங்காய தாள்,காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் வெந்தபின் அதில் சோயா சாஸ் மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.வேகவைத்த சாதம் மற்றும் மிளகு தூள் & உப்பு சேர்த்து லேசாக பிரட்டி எடுத்து கொள்ளவும்.கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாளின் பச்சை  நிற பகுதியை மேலே தூவி  கொள்ளவும்.சுவையாக பன்னீர் ப்ரைட் ரைஸ் தயார்.
குறிப்புக்கள் 
  • காய்கறிகளை ரொம்ப soft-ஆ வேகவைக்க வேண்டாம்,கொஞ்சம் crunchy-ஆ இருந்தால் தான் ப்ரைட் ரைஸ்-க்கு நல்ல இருக்கும்.
  • நல்ல brand சோயா சாஸ் பயன்படுத்திக்கொள்ளவும்,அப்போது தான் சுவையும் மற்றும் மணமும் நன்றாக இருக்கும்.
  • நல்லெண்ணெய் ப்ரைட் ரைஸ் ரொம்ப நன்றாக இருக்கும்.

Read more »

Wednesday, August 15, 2018

சேமியா கேசரி | Semiya Kesari

சேமியா கேசரி, ரொம்ப சீக்கரம் செய்யக்கூடிய ஒரு சுவையான இனிப்பு வகை. புதுசா சமையல் செய்து பழகுறீங்கனா, நீங்க முதல் முதலாக செய்து பார்க்க ஏற்ற ஒரு ஸ்வீட் இது. ரவா கேசரி போல கை விடாமல் கிளறும் அல்லது கட்டி விழுந்துவிடும் அப்படினு எல்லாம் இந்த கேசரிக்கு பயப்படவேண்டாம்,யாரு வேணும்னாலும் ரொம்ப சுலபாக செய்து விடலாம். அதை போல் வீட்டுக்கு தீடீருன்னு விருந்தாளி வந்துட்டா கூட ,ஒரு 10-15 நிமிடத்தில் இந்த செய்து கொடுத்து அசத்திடலாம். மேலும் ரவா கேசரி போல் இதற்கு அதிகமாக நெய் தேவைப்படாது இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்.வாங்க இப்போ இந்த கேசரி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். மேலும இந்த வலை பக்கத்தில் இது 50வது பதிவு அதனால் இந்த கேசரி-வுடன் அதை கொண்டாடுவோம்.

சேமியா கேசரி | Semiya Kesari

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சேமியா - 1/2 கப் 
சர்க்கரை - 1/4 கப் 
தண்ணீர் - 3/4 கப் 
ஏலக்காய் - 2
நெய் - 3 டேபிள் ஸ்பூன் 
முந்திரி பருப்பு - தேவைக்கேற்ப 
கேசரி கலர் - ஒரு சிட்டிகை 
செய்முறை
முதலில் ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடான பின் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.அடுத்து அதில் சேமியாவை சேர்த்து,சேமியா லேசாக நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.பின்  அதில் தண்ணீர் சேர்த்து சேமியாவை நன்கு வேகவிடவும்.சேமியா வெந்த பின் அதில் கேசரி கலரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், சர்க்கரை அரைத்து மீண்டும் திக்காக வரும் வரை கிளறிக்கொள்ளவும்.கடைசியாக பொடி செய்த ஏலக்காய் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து அடுப்பிலிருந்து இறக்கிக்கொள்ளவும்.சுவையான சேமியா கேசரி பரிமாற தயார்.
குறிப்புக்கள்:
  • கொடுத்துள்ள தண்ணீரின் அளவு கேசரி உதிரியாக வர சரியாக இருக்கும் ,உங்களுக்கு கொஞ்சம் குழைவாக வேண்டுமென்றால் கூடுதலாக ஒரு 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  • நீங்கள் விருப்பினால் ஏலக்காய்க்கு பதிலாக குங்குமப்பூ கூட வாசனைக்கு சேர்த்து கொள்ளலாம்.
  • இந்த கேசரிக்கு நான் MTR brand சேமியா பயன்படுத்தியுள்ளேன்.

Read more »