Monday, May 21, 2018

சிக்கன் பிரியாணி | கோழி பிரியாணி | பிரஷர் குக்கர் பிரியாணி

சிக்கன் பிரியாணி / கோழி பிரியாணி, எளிதாக குக்கரில் செய்யக்கூடிய சுவையான ஒரு பிரியாணி. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை பல வகையான பிரியாணி உள்ளன. தமிழ் நாட்டிலே ஆம்பூர் பிரியாணி , திண்டுக்கல் பிரியாணி அப்படினு ஒவ்வொரு ஊருக்கு ஒரு பிரியாணி பிரபலம். பாரம்பரியமான முறைப்படி செய்யப்படும் பிரியாணியில் அரிசி மற்றும்  இறைச்சி-யை தனியாக முக்கால் பதம் வேக வைத்து பின்பு இரண்டையும் ஒவ்வொரு அடுக்காக பரப்பி தம் போட்டு வேக வைப்பார்கள். அதன் ரெசிபி-யை நாம் இன்னொரு நாள் பார்க்கலாம் , இன்று சுலபமாக அதை சுவையுடன் பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி எப்படி செய்வதுனு பாக்கலாம்.

Chicken Biryani in Pressure cooker

Preparation Time : 1 hr | Cooking Time : 30 minsServes : 2 to 3 
Recipe Category: Biryani | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
கோழி - 400 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்  
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு  - 1 டீஸ்பூன் 
புதினா  மற்றும் கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
முந்திரி பருப்பு - 5
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து 
நெய் - 1 & 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப 
சிக்கன்  ஊற வைக்க 
தயிர் - 3 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
உப்பு - சிக்கன் தேவையான அளவு

செய்முறை
முதலில் சிக்கன்-யை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். அதில் சிக்கன்  ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக  சேர்க்கவும்.மசாலாவில் சிக்கன்-யை நன்கு விரைவி ஒரு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி-யை ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை மெலிதாக, தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். தேவையான புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும்.அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கொள்ளவும். நெய் சூடான பின் பட்டை,கிராம்பு ,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையை சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும். பின் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்.முந்திரி பருப்பு பொன்னிறமாக ஆனபின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனபின் தக்காளி சேர்க்கவும்.அடுத்து ஊற வைத்த சிக்கன் மற்றும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு ஒரு 10 நிமிடம் வதக்கவும்.இதற்கிடையில் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும். இன்னொரு அடுப்பில் 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்தபின் அதையெடுத்து சிக்கனில் ஊற்றவும்.சாதத்திற்கு தேவையான உப்பு மட்டும் சேர்க்கவும். ஏற்கனவே சிக்கன்-கு நாம் உப்பு சேர்த்து விட்டோம்.அரிசி சிக்கன்-வுடன் சேர்த்து மெதுவாக கிளறி விடவும். கடைசியாக எலுமிச்சை சாறை விடவும்.தண்ணீர் நன்கு கொதித்த பின் குக்கரை மூடி 3 விசில் வேகவைக்கும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்!!. வெங்காய சம்பல் மற்றும் அவித்த முட்டையுடன் பரிமாறவும்.
குறிப்புக்கள் 

  • அரிசி ஒரு பங்கு என்றால் தண்ணீர் இரண்டு பங்கு , அதுபோல அரிசியை கண்டிப்பாக ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • சிக்கன்-யை குக்கரில் சேர்த்த பின் ஒரு 10 நிமிடம் தண்ணீர் ஊற்றாமல் சிக்கன் மற்றும் தயிரில் உள்ள நீரில் வேகவிடுவது சுவையை கூட்டும்.
  • புளிக்காத தயிரை பயன்படுத்தி கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் 1 டீஸ்பூன் நெய்யை கடைசியாக பரிமாறும் முன் ஊற்றி கிளறி கொள்ளவும். இன்னும் சுவையை நன்றாக இருக்கும்.



No comments:

Post a Comment