Wednesday, May 30, 2018

பசலை கீரை பருப்பு கூட்டு

பசலை கீரை பருப்பு கூட்டு , சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. இது சாதம் மற்றும் சப்பாத்தி-யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பசலை கீரையில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது இதனை தொடர்ந்து சமையலில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. அதுமட்டுமின்றி இதில் பருப்பு சேர்வதால் நமக்கு தேவையான புரோத சத்தும் கிடைக்கும், அதனால் இந்த மாதிரி கூட்டு வகைகளை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது ரொம்ப நல்லது. வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Keerai Paruppu Kootu

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பசலை கீரை - 1 கட்டு  (சிறியது )
பாசிப்பருப்பு - 1/4 கப் 
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1/2
தக்காளி -1
மஞ்சள் தூள்  - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 3/4 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
பெருங்காயம் தூள் - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன் 
தாளிக்க 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 1 

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி அதை பிரஷர் குக்கரில் எடுத்து கொள்ளவும் , அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ளவும். அடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் கடலை பருப்பை எடுத்து கொள்ளவும் அதற்கும் தேவையானளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு 3 விசில் வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.வெங்காயம், தக்காளி மற்றும் கீரை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கொள்ளவும்.அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கிய பின் தக்காளியை போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து கீரையை சேர்த்து, அது நன்கு சுருங்கும் வரை வதக்கவும். பின்பு மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பாசிப்பருப்பை கரண்டியால் நன்கு மசித்து கொள்ளவும், பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை  கீரையில் சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக்கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கீரையில் சேர்த்து கொள்ளவும்.சுவையான பசலை கீரை பருப்பு கூட்டு, பரிமாறும் முன்பு நெய்யை சேர்த்து கொள்ளவும்.
குறிப்புகள் 

  • பாசிபருப்புக்கு பதில் துவரம் பருப்பு கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • உங்கள் தேவையான பதத்திற்கேற்ப தண்ணீரை கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளவும்.



No comments:

Post a Comment