Wednesday, May 23, 2018

ரவை உப்புமா

ரவை உப்புமா, ரொம்ப சுலபமாக, எளிதில் செய்யக்கூடிய ஒரு டிபன் ஐட்டம். நிறைய பேறு உப்புமா என்றாலே சாப்பாடே வேண்டாம் என்று பதறி ஓடுவார்கள், நானும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்தேன். எப்போ நானே சமைக்க ஆரம்பிச்சேனோ அப்போது இருந்துதான் உப்புமா ஐட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்தது என்று சொல்லுவதை விட அதன் அருமை புரிந்தது என்று சொல்லலாம். 
சிம்பிளான பொருட்களை கொண்டு மிக எளிதில் செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி என்று உப்புமாவை கண்டிப்பாக சொல்லலாம்.சின்ன சின்ன விசயங்களை கவனத்தில் கொண்டால் ஒரு சூப்பர் உப்புமாவை நீங்களும் செய்யலாம்,வாங்க இப்போ எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

Ravai Upma

Preparation Time : 5 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Breakfast | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
ரவை - 1/2 கப் 
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 அங்குலம் துண்டு 
துருவிய தேங்காய் - 1 & 1/2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை
முதலில் வெறும் வாணலில் ரவையை நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.அடுத்து வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டாக வகுந்து கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் காய வைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம்,இஞ்சி ,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதி வர விட வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் ஒரு கையால் ரவையை தண்ணீரில் தூவி கொண்டே மற்றொரு கையால் கிளறவும். ஒரு 3-4 நிமிடத்தில் ரவை நன்கு வெந்து விடும் , பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு 2-3 நிமிடம் உப்புமாவை மெல்லிய தீயில் மூடி வைக்கவும்.சூப்பரான ரவை உப்மா தயார். பரிமாறும் போது கொத்தமல்லி இலை தூவி கொள்ளவும்.
குறிப்புக்கள் 
  • ரவையை தண்ணீரில் தூவி கொண்டே மற்றொரு கையால் கிளறவும், இல்லாவிட்டால் உப்புமா  கட்டிக்காட்டியாக ஆகிவிடும்.
  • தேங்காய் எண்ணெய் உப்புமாவிற்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
  • ரவையை வறுத்துக்கொள்வதால் உப்புமா கையில் பிசு பிசுவென்று ஒட்டாமல் வரும்.
  • இஞ்சி விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.



No comments:

Post a Comment