Tuesday, June 12, 2018

பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Urundai Kuzhambu

பருப்பு உருண்டை குழம்பு, ரொம்ப சுவையான ஒரு குழம்பு வகை !!! கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உருண்டைகளை கொண்டு செய்யும் இந்த குழம்பு சாதமுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இது வரை இந்த குழம்பை செய்து பார்த்தது இல்லையென்றால் கண்டிப்பாக செய்து பார்க்கவும், ரொம்ப சூப்பரா இருக்கும். எங்கள் வீட்டில் ஆச்சி காலத்திலிருந்தே குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது மத்தியானம் சாப்பாட்டுக்கு இந்த உருண்டை குழம்பை செய்து விடுவோம், வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு இது !!! 
இந்த குழம்பை ட்ரை  பண்ண நிறைய பேரு உருண்டை குழம்பில் கரைந்து போய்விடுது அப்படி சொல்லி கேட்டிருக்கேன்,அப்படி கரையாமல் இருக்க கீழே சில குறிப்புக்கள் கொடுத்திருக்கேன், முதல் முறை செய்ய போறீங்க/உருண்டை குழம்பில் முன் செய்த போது கரைந்து போய்விட்டது அப்படினா கண்டிப்பாக அந்த குறிப்புகளை எல்லாம் நல்ல கவனத்தில் வைத்துக்கொண்டு செய்யவும் , முதல் தடவையே அட்டகாசமாக இந்த குழம்பை செய்துவிடலாம். வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Urundai Kuzhambu

Preparation Time : 1 hr | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பருப்பு உருண்டைக்கு தேவையான பொருட்கள் 
கடலைப்பருப்பு - 1/3 கப் 
சின்ன வெங்காயம் - 4/ பெரிய வெங்காயம் -1/4
கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 2 டீ ஸ்பூன் 
குழம்புக்கு தேவையான பொருட்கள் 
சின்ன வெங்காயம் - 6/ பெரிய வெங்காயம் -1/2
தக்காளி - 1 
புளி - நெல்லிக்காய்  அளவு 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி இலை - தேவையானளவு 
அரைக்க தேவையான பொருட்கள் 
துருவிய தேங்காய் - 1/4 டேபிள் ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின் அதனை மிக்ஸில் நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். ஒரு வாணலில் 2 டீ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பொடியாக நறுக்கிய 1/4 வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் தேவையான உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு 3-4 நிமிடத்தில் பருப்பு நன்கு வதங்கி ஒன்றாக வரும்,அப்பொழுது தீயை அணைத்துவிடவும். பருப்பு கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற விடவும்.பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அடுத்து குழம்புக்கு தேவையான வெங்காயம் மற்றும் தக்காளி-யை நறுக்கி கொள்ளவும்.ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து, சூடான பின் கடுகு மற்றும் உளுந்து தாளித்து கொள்ளவும். அடுத்து வெங்காயம்,கறிவேப்பில்லை மற்றும் தக்காளி-யை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு மசிந்த பின்,ஊறவைத்த புளியை கரைத்து புளி தண்ணீரை சேர்க்கவும்.அதனுடன் மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இடைப்பட்ட நேரத்தில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும். புளி தண்ணீர் நன்கு கொதித்த பின் அரைத்த தேங்காயை சேர்த்து மறுபடியும் நன்கு கொதி வர விடவும்.அதில் பருப்பு உருண்டையை மெதுவாக போட்டு 5-7 நிமிடம் வரை குழம்பை கொதிக்க விட்டு அணைத்து விடவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளவும்.சுவையான உருண்டை குழம்பு தயார்.
குறிப்புக்கள் 
  • பருப்பு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். நன்கு ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது.
  • பருப்பு உருண்டைகளை குழம்பு நன்கு கொதிக்கும் போது போடவும் அல்லது உருண்டைகள் குழம்பில் கரைந்து விடும்.
  • பருப்பு உருண்டைகளை குழம்பில் போட்ட பின் கொஞ்சம் நேரம் கரண்டி வைத்து குழம்பை கிளற கூடாது. பருப்பு உருண்டை வேகும் முன் அடிக்கடி குழம்பை கிளறினால் உருண்டைகள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • பருப்பு உருண்டைகளை குழம்பில் போடும் முன் நீங்க குழம்பை எப்பொழுதும் வைக்கும்  பதத்தை விட கொஞ்சம் தண்ணியாக வைக்கவும் ஏனென்றால் பருப்பு உருண்டைகளை குழம்பில் போட்ட பின் குழம்பு கொஞ்சம் கெட்டி படும்.

No comments:

Post a Comment