Tuesday, June 12, 2018

இட்லி/ தோசை பொடி | எள்ளு பொடி | Idli/dosa podi

இட்லி/ தோசை பொடி, எள்ளு சேர்த்து செய்யப்படும் இந்த இட்லி/தோசை பொடி ரொம்ப சுவையாக மற்றும் மணமாக இருக்கும். நமது வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும்  இட்லி/ தோசை பொடி ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இன்னைக்கு நான் ஷேர் பண்ணும் ரெசிபி எங்கள் வீட்டில் ஆண்டுகளாக செய்யப்படும் ஒரு இட்லி பொடி. இது இட்லி மற்றும் தோசை வகைகளுக்கு அருமையாக இருக்கும்.  இந்த ரெசிபில் நான் கொடுத்துள்ள எள்ளு அளவை விட ஒரு பங்கு கூட சேர்த்து கொண்டால்,எந்த பொடியை எண்ணெயே இல்லாமல் அப்படியே இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு கொள்ளலாம். வாங்க இந்த சூப்பர் இட்லி பொடியை இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

இட்லி/ தோசை பொடி | எள்ளு பொடி | Idli/dosa podi

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsMakes : 2/3 cup 
Recipe Category: Spices | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 25
உடைத்த கருப்பு உளுந்து /முழு உளுந்து - 1/2 கப் 
கருப்பு எள்ளு - 1/4 கப் 
கறிவேப்பில்லை - 2 கொத்து 
பூண்டு பல் -  5-7
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 


செய்முறை
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் முதலில் உளுந்தை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.அதனை ஒரு தட்டில் மாற்றிவிட்டு அதே கடாயில் அடுத்து மிளகாயை வறுத்து கொள்ளவும்.மிளகாய் நன்கு நிறம் மாறிய பின் அதனையும் ஒரு தட்டில் மாற்றிவிட்டு அதே கடாயில் அடுத்து பூண்டு மற்றும் கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.கடைசியாக எள்ளு-யை போட்டு அது நன்கு பொரியும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.பொரியும் போது வெளியில் சிதறாமல் இருக்க ஒரு மூடியால் மூடி வைத்துக்கொள்ளவும். வறுத்த அனைத்தையும் சிறுது நேரம் ஆற வைக்கவும்.பின் மிக்ஸி ஜாரில் எள்ளு தவிர அனைத்தையும் ஒன்றாக போட்டு கூடவே பெருங்காய்த்தூள் சேர்த்து நன்கு நைசாக  அரைத்து கொள்ளவும்.கடைசியாக எள்ளு  மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைசாக  அரைத்து கொள்ளவும். ஆறிய பின் ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும். சுவையான எள்ளு பொடி தயார்.
குறிப்புக்கள் 
  • எள்ளு சேர்த்து அரைத்த பின், பொடி லேசாக மிக்ஸி ஜாரில் ஒட்டி கொள்ளும், அதனால் ஒரு கரண்டியால் நன்கு ஓரத்தில் உள்ளதை எடுத்து விட்டு மிக்ஸியை சுற்றி கொள்ளவும்.
  • முழு உளுந்தை விட தொலி உளுந்து தான் நன்கு வாசமாக இருக்கும்.
  • அதைப்போல் கறிவேப்பிலையும் நன்கு சுவையும் வாசமும் கொடுக்கும்.
  • உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை சேர்த்து கொள்ளவும். கொடுத்துள்ள அளவு மிதமான காரமாக இருக்கும்.

1 comment: