Friday, August 3, 2018

வாழைக்காய் புட்டு |வாழைக்காய் பொடிமாஸ் | Vazhakkai Podimas

வாழைக்காய் புட்டு/பொடிமாஸ் , எளிதாக வாழைக்காயை கொண்டு செய்யக்கூடிய ஒரு சூப்பர் சைடு டிஷ். இந்த வாழைக்காய் பொடிமாஸ் திருநெல்வேலி பக்கம் ரொம்ப பிரபலம், இது சாம்பார் மற்றும் கார குழம்பு வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும். புட்டு-னு பெயரை பார்த்தவுடன் ஏதோ ஸ்வீட் டிஷ் -னு நெனைச்சுடாதீங்க,எங்க ஊரு பக்கம் எதை துருவி செய்தாலும் அதற்கு புட்டு தான் பெயர் இருக்கும், வாழைக்காய் புட்டு,கேரட் புட்டு,உருளை புட்டு இப்படினு பல. எல்லாமே துருவி செய்யக்கூடிய பொரியல் வகைகள்,அவ்வளவுதான்.எப்போதும் செய்யும் வாழைக்காய் வருவலுக்கு பதிலாக கொஞ்சம் வித்தியாசமாக இந்த வாழைக்காய் பொடிமாஸ்-யை ஒரு நாள் செய்து பாருங்கள். வாங்க எப்போ வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வாழைக்காய் பொடிமாஸ் | Vazhakkai Podimas

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வாழைக்காய் -1
வெங்காயம் - 1(சிறியது )
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 
துருவிய தேங்காய்  - 1 & 1/2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் வாழைக்காய் மூழ்கும் வரை தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் வாழைக்காயை போட்டு ஒரு 8-10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.வெந்தபின் தண்ணீரிலிருந்து வாழைக்காயை எடுத்து ஒரு தட்டில் நன்கு ஆறவிடவும். நன்கு ஆறிய பின் அதன் தோலை உரித்து வாழைக்காயை துருவிக்கொள்ளவும்.துருவிய வாழைக்காயில் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை  மெலிதாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி,சூடான பின் அதில் கடுகு மற்றும் உளுந்த பருப்பை தாளித்து கொள்ளவும். அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பில்லை கூடவே சிறுது உப்பு  சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.வதங்கிய பின் அதில் துருவிய வாழைக்காயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ஒரு மூடியால் 2 நிமிடம் மூடி வேகவிடவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.சுவையான வாழைக்காயை பொடிமாஸ் /புட்டு தயார்.
குறிப்புக்கள் 
  • வாழைக்காயை நன்கு ஆறிய பின் துருவிக்கொள்ளவும், இல்லையென்றால் குழைந்து போய்விடும்.
  • வாழைக்காயை நன்கு வெந்தால்தான் தோல் உரிக்க எளிதாக வரும்.
  • சின்ன வெங்காயம் இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ளவும்.

No comments:

Post a Comment