Friday, August 24, 2018

கார சட்னி | வெங்காய சட்னி | Kara Chutney | Onion Chutney

கார சட்னி / வெங்காய சட்னி, எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான சட்னி,இது  இட்லி,தோசை மற்றும் பணியாரம் வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த கார சட்னி உணவகங்களில் இட்லி மற்றும் தோசைக்கு சைடு டிஷ் ஆக தரப்படும் கார சட்னி போலவே இருக்கும்.உங்களுக்கு உணவகங்களில் கிடைக்கும்  கார சட்னி பிடிக்குமென்றால் இந்த கார சட்னி ரெசிபியை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்கள். தேங்காய் இல்லாமல் செய்யப்படும் சட்னியில்  எனக்கு ரொம்ப  பிடித்த ஒரு சட்னி இது. வாங்க இப்போ இந்த சூப்பர் கார சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

கார சட்னி | வெங்காய சட்னி | Kara Chutney | Onion Chutney

Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsServes : 2 to 3 
Recipe Category: chutney | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 2 (சிறியது )
தக்காளி - 1 
பூண்டு - 3 பல் 
காய்ந்த மிளகாய் - 3
கடலை பருப்பு  - 1/2 டேபிள் ஸ்பூன் 
கேரட் - சிறு துண்டு (தேவைப்பட்டால் )
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
தாளிக்க 
நல்லெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீ ஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து.


செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு வாணலில் நல்லெண்ணெய்  ஊற்றி காய்ந்த பின் அதில் கடலைப்பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு 30 நொடி வதக்கவும் , பின் அதில் வெங்காயம் மற்றும் சிறுதளவு உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.பின் தக்காளி மற்றும் கேரட் சேர்த்து நன்கு இரண்டையும் வதக்கி கொள்ளவும். அடுப்பை அணைத்து சிறுது நேரம் ஆறவிடவும்.ஆறியபின் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு  தேவையானளவு உப்பும் சேர்த்து நன்கு நைசாக(தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் ) அரைத்து கொள்ளவும். கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும்.நொடியில் கார சட்னி தயார்.
குறிப்புக்கள் 
  • சட்னியின் நிறம் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் நிறத்தை பொருத்து கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
  • கேரட் சட்னிக்கு ஒரு லேசான இனிப்பு சுவையை கொடுக்கும்,அது இந்த சட்னிக்கு நன்றாக இருக்கும்.
  • கடலை பருப்பு சட்னிக்கு நல்ல கெட்டித்தன்மையை கொடுக்கும்,அதனால் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

No comments:

Post a Comment