Tuesday, June 12, 2018

இட்லி/ தோசை பொடி | எள்ளு பொடி | Idli/dosa podi

இட்லி/ தோசை பொடி, எள்ளு சேர்த்து செய்யப்படும் இந்த இட்லி/தோசை பொடி ரொம்ப சுவையாக மற்றும் மணமாக இருக்கும். நமது வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும்  இட்லி/ தோசை பொடி ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இன்னைக்கு நான் ஷேர் பண்ணும் ரெசிபி எங்கள் வீட்டில் ஆண்டுகளாக செய்யப்படும் ஒரு இட்லி பொடி. இது இட்லி மற்றும் தோசை வகைகளுக்கு அருமையாக இருக்கும்.  இந்த ரெசிபில் நான் கொடுத்துள்ள எள்ளு அளவை விட ஒரு பங்கு கூட சேர்த்து கொண்டால்,எந்த பொடியை எண்ணெயே இல்லாமல் அப்படியே இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு கொள்ளலாம். வாங்க இந்த சூப்பர் இட்லி பொடியை இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

இட்லி/ தோசை பொடி | எள்ளு பொடி | Idli/dosa podi

Preparation Time : 10 mins | Cooking Time : 10 minsMakes : 2/3 cup 
Recipe Category: Spices | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 25
உடைத்த கருப்பு உளுந்து /முழு உளுந்து - 1/2 கப் 
கருப்பு எள்ளு - 1/4 கப் 
கறிவேப்பில்லை - 2 கொத்து 
பூண்டு பல் -  5-7
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 


செய்முறை
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் முதலில் உளுந்தை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.அதனை ஒரு தட்டில் மாற்றிவிட்டு அதே கடாயில் அடுத்து மிளகாயை வறுத்து கொள்ளவும்.மிளகாய் நன்கு நிறம் மாறிய பின் அதனையும் ஒரு தட்டில் மாற்றிவிட்டு அதே கடாயில் அடுத்து பூண்டு மற்றும் கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.கடைசியாக எள்ளு-யை போட்டு அது நன்கு பொரியும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.பொரியும் போது வெளியில் சிதறாமல் இருக்க ஒரு மூடியால் மூடி வைத்துக்கொள்ளவும். வறுத்த அனைத்தையும் சிறுது நேரம் ஆற வைக்கவும்.பின் மிக்ஸி ஜாரில் எள்ளு தவிர அனைத்தையும் ஒன்றாக போட்டு கூடவே பெருங்காய்த்தூள் சேர்த்து நன்கு நைசாக  அரைத்து கொள்ளவும்.கடைசியாக எள்ளு  மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைசாக  அரைத்து கொள்ளவும். ஆறிய பின் ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும். சுவையான எள்ளு பொடி தயார்.
குறிப்புக்கள் 
  • எள்ளு சேர்த்து அரைத்த பின், பொடி லேசாக மிக்ஸி ஜாரில் ஒட்டி கொள்ளும், அதனால் ஒரு கரண்டியால் நன்கு ஓரத்தில் உள்ளதை எடுத்து விட்டு மிக்ஸியை சுற்றி கொள்ளவும்.
  • முழு உளுந்தை விட தொலி உளுந்து தான் நன்கு வாசமாக இருக்கும்.
  • அதைப்போல் கறிவேப்பிலையும் நன்கு சுவையும் வாசமும் கொடுக்கும்.
  • உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை சேர்த்து கொள்ளவும். கொடுத்துள்ள அளவு மிதமான காரமாக இருக்கும்.

Read more »

பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Urundai Kuzhambu

பருப்பு உருண்டை குழம்பு, ரொம்ப சுவையான ஒரு குழம்பு வகை !!! கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உருண்டைகளை கொண்டு செய்யும் இந்த குழம்பு சாதமுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இது வரை இந்த குழம்பை செய்து பார்த்தது இல்லையென்றால் கண்டிப்பாக செய்து பார்க்கவும், ரொம்ப சூப்பரா இருக்கும். எங்கள் வீட்டில் ஆச்சி காலத்திலிருந்தே குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது மத்தியானம் சாப்பாட்டுக்கு இந்த உருண்டை குழம்பை செய்து விடுவோம், வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு இது !!! 
இந்த குழம்பை ட்ரை  பண்ண நிறைய பேரு உருண்டை குழம்பில் கரைந்து போய்விடுது அப்படி சொல்லி கேட்டிருக்கேன்,அப்படி கரையாமல் இருக்க கீழே சில குறிப்புக்கள் கொடுத்திருக்கேன், முதல் முறை செய்ய போறீங்க/உருண்டை குழம்பில் முன் செய்த போது கரைந்து போய்விட்டது அப்படினா கண்டிப்பாக அந்த குறிப்புகளை எல்லாம் நல்ல கவனத்தில் வைத்துக்கொண்டு செய்யவும் , முதல் தடவையே அட்டகாசமாக இந்த குழம்பை செய்துவிடலாம். வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Urundai Kuzhambu

Preparation Time : 1 hr | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பருப்பு உருண்டைக்கு தேவையான பொருட்கள் 
கடலைப்பருப்பு - 1/3 கப் 
சின்ன வெங்காயம் - 4/ பெரிய வெங்காயம் -1/4
கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 2 டீ ஸ்பூன் 
குழம்புக்கு தேவையான பொருட்கள் 
சின்ன வெங்காயம் - 6/ பெரிய வெங்காயம் -1/2
தக்காளி - 1 
புளி - நெல்லிக்காய்  அளவு 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி இலை - தேவையானளவு 
அரைக்க தேவையான பொருட்கள் 
துருவிய தேங்காய் - 1/4 டேபிள் ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின் அதனை மிக்ஸில் நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். ஒரு வாணலில் 2 டீ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பொடியாக நறுக்கிய 1/4 வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் தேவையான உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு 3-4 நிமிடத்தில் பருப்பு நன்கு வதங்கி ஒன்றாக வரும்,அப்பொழுது தீயை அணைத்துவிடவும். பருப்பு கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற விடவும்.பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அடுத்து குழம்புக்கு தேவையான வெங்காயம் மற்றும் தக்காளி-யை நறுக்கி கொள்ளவும்.ஒரு வாணலில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து, சூடான பின் கடுகு மற்றும் உளுந்து தாளித்து கொள்ளவும். அடுத்து வெங்காயம்,கறிவேப்பில்லை மற்றும் தக்காளி-யை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு மசிந்த பின்,ஊறவைத்த புளியை கரைத்து புளி தண்ணீரை சேர்க்கவும்.அதனுடன் மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இடைப்பட்ட நேரத்தில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும். புளி தண்ணீர் நன்கு கொதித்த பின் அரைத்த தேங்காயை சேர்த்து மறுபடியும் நன்கு கொதி வர விடவும்.அதில் பருப்பு உருண்டையை மெதுவாக போட்டு 5-7 நிமிடம் வரை குழம்பை கொதிக்க விட்டு அணைத்து விடவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளவும்.சுவையான உருண்டை குழம்பு தயார்.
குறிப்புக்கள் 
  • பருப்பு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். நன்கு ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது.
  • பருப்பு உருண்டைகளை குழம்பு நன்கு கொதிக்கும் போது போடவும் அல்லது உருண்டைகள் குழம்பில் கரைந்து விடும்.
  • பருப்பு உருண்டைகளை குழம்பில் போட்ட பின் கொஞ்சம் நேரம் கரண்டி வைத்து குழம்பை கிளற கூடாது. பருப்பு உருண்டை வேகும் முன் அடிக்கடி குழம்பை கிளறினால் உருண்டைகள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • பருப்பு உருண்டைகளை குழம்பில் போடும் முன் நீங்க குழம்பை எப்பொழுதும் வைக்கும்  பதத்தை விட கொஞ்சம் தண்ணியாக வைக்கவும் ஏனென்றால் பருப்பு உருண்டைகளை குழம்பில் போட்ட பின் குழம்பு கொஞ்சம் கெட்டி படும்.

Read more »

Sunday, June 3, 2018

சில்லி சீஸ் பிரட் டோஸ்ட் | Chili Cheese Bread Toast

சில்லி சீஸ் பிரட் டோஸ்ட், பிரட் துண்டுகளை கொண்டு சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான டோஸ்ட் ரெசிபி. இதை காலை பிரேக்பாஸ்ட்-ஆகா அல்லது மாலை பசங்க ஸ்கூலிருந்து வந்தவுடன் ஸ்னாக்ஸ்-ஆகா கூட செய்து கொடுக்கலாம். ரொம்ப சீக்கரம் செய்துடலாம், சுவையும் அசத்தலாக இருக்கும்.வாங்க இப்போ இந்த டோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Chili Cheese Bread Toast

Preparation Time : 5 mins | Cooking Time : 10 minsMakes :
Recipe Category: Breakfast/Snacks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 4
பச்சை மிளகாய் - 3
மொசரில்லா/பீட்சா சீஸ் -  1/3 - 1/4 கப் 
எலுமிச்சை பழம் சாறு  - 1 டீஸ்பூன் 
குடை மிளகாய்(பொடியாக நறுக்கியது ) - 1/4 கப் 
கொத்தமல்லி இலை - ஒரு கையளவு 
உப்பு - தேவைக்கேற்ப 
வெண்ணெய் - பொரிப்பதிற்கு - 2 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகாய், எலுமிச்சை பழம் சாறு மற்றும் உப்பை சேர்க்கவும்.அடுத்து கொத்தமல்லி இலையை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும். பிரட் டோஸ்ட் செய்ய தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.ஒரு பிரட் துண்டில் தேவைக்கேற்ப அரைத்த மிளகாய் விழுதை தடவி கொள்ளவும்.அடுத்து குடை மிளகாயை மேலே தூவி கொள்ளவும்.கடைசியாக தேவையான அளவு சீஸை தூவவும்.ஒரு கடாயில் வெண்ணையை சேர்த்து அது உருகிய பின் பிரட் துண்டையை அதில் வைத்து ஒரு மூடியால் மூடி விடவும்.மெல்லிய தீயில் சீஸ் லேசாக உருகும் வரை டோஸ்ட் பண்ணி எடுக்கவும். விருப்பட்டபடி கட் பண்ணி பரிமாறவும்.சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி !!!
குறிப்புக்கள் 
  • மெல்லிய தீயில் பிரட்-யை டோஸ்ட் செய்யவும், இல்லையென்றால் சீஸ் உருகும் முன் பிரட் ஒரு பக்கம் கருகி விடும்.
  • சீஸ் சீக்கரம் உருக மூடியால் கடாயை மூடுவது அவசியம்.
  • எந்த கலர் குடை மிளகாயும் பயன்படுத்தலாம் அல்லது குடை மிளகாய் இல்லாமலும் இந்த டோஸ்ட்-யை செய்யலாம்.
  • உங்கள் தேவைக்கேற்ப மிளகாயை விழுதை கூடவோ குறையவோ சேர்த்து கொள்ளவும்.

Read more »

மட்டன் குழம்பு | Mutton Kuzhambu in Pressure Cooker

மட்டன் குழம்பு, சுவையான மற்றும் எளிதாக குக்கரில் செய்யக்கூடிய மட்டன் குழம்பு. இது சாதம் மற்றும் டிபன் வகைகளுக்கு அருமையாக இருக்கும்.ரொம்ப அதிகம் மசாலா சேர்க்காமல் செய்யப்படும் இந்த மட்டன் குழம்பு எங்க வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும், அதும் ஞாயிற்று கிழமைகளில்  காலையில் டிபனாக பெரும்பாலும்  இடியாப்பத்துடன் எந்த மட்டன் குழம்பு தான் இருக்கும். இரண்டும் சூப்பர் காம்பினேஷன்!!! வாங்க எப்போ இந்த சூப்பர் மட்டன் குழம்பை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Mutton Kuzhmabu in Pressure Cooker

Preparation Time : 10 mins | Cooking Time : 25 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மட்டன்/ஆட்டு இறைச்சி  - 200 கிராம் 
சின்ன வெங்காயம் - 7 
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது  - 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன் 
மிளகாய் பொடி - 3/4 டீ ஸ்பூன் 
கொத்தமல்லி பொடி - 2 & 1/2 டீ ஸ்பூன் 
நல்லண்ணெய் - 1 & 1/2 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1/2 அங்குலம் துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப
அரைப்பதற்கு 
துருவிய தேங்காய் - 1/4 கப் 
முந்திரி பருப்பு - 4
சோம்பு  - 1/2 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் மட்டனை  நன்கு சுத்தப்படுத்தி எடுத்து வைத்து கொள்ளவும் . வெங்காயம் மற்றும் தக்காளியை  பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெய்யை காய வைத்து பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும் . அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை போடவும், வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.அடுத்து மட்டன் ,மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போனபின் அதில் தக்காளியை போடவும்,கூடவே மஞ்சள் மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.அடுத்து கொத்தமல்லி பொடி மற்றும் உப்பையும் சேர்த்து மட்டன்-வுடன் நன்கு கலந்து கொள்ளவும்.தேவைக்கேற்ற தண்ணீர் ஊற்றி மட்டனை ஒரு 5 விசில் வேக விடவும். இடைப்பட்ட நேரத்தில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும்.குக்கரில் பிரஷர் போன பின் திறந்து தேங்காய் விழுது மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.எண்ணெய் மேலே படரும் வரை கொதித்த பின் அடுப்பை அனைத்துக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளவும்.சுவையான மட்டன் குழம்பு தயார்.
குறிப்புக்கள் 

  • நல்லெண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் குழம்புக்கு நல்ல சுவையை கொடுக்கும்.
  • தேவைப்பட்டால் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

Read more »

Friday, June 1, 2018

செள செள கூட்டு | Chow Chow Kootu

செள செள கூட்டு, சுவையான மற்றும் சீக்கரம் செய்யக்கூடிய ஒரு சூப்பர் சைடு டிஷ். இதை சாம்பார் மற்றும் புளி குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் புளி குழம்பு செய்யும் பொழுது எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு கூட்டு அல்லது பருப்பு இருக்கும். அப்படி அடிக்கடி செய்யக்கூடிய கூட்டுகளில் ஒன்று தான் இந்த  செள செள கூட்டு. செய்வதும் சுலபம்,சுவையும் அதிகம் !!! வாங்க இந்த சுவையான செள செள கூட்டு எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

செள செள கூட்டு | Chow Chow Kootu

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
செள செள - 1 
பசி பருப்பு - 1/4 கப் 
பச்சை மிளகாய் - 2 
பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
கொத்தமல்லி இலை - சிறுதளவு 
தாளிக்க தேவையான பொருட்கள் 
எண்ணெய்  - 1 டீஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 ட்ஸ்ப் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
சின்ன வெங்காயம் - 2(பொடியாக நறுக்கியது )
காய்ந்த மிளகாய் - 1


செய்முறை
பசி பருப்பை கழுவி குக்கரில் எடுத்து கொள்ளவும், அதனுடன் பெருங்காயம் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வர விடவும். இடைப்பட்ட நேரத்தில் செள செள-யை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.பருப்பு கொதித்தவுடன் செள செள, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வேக விட்டு இறக்கவும்.குக்கரை திறந்து லேசாக பருப்பை மசித்து கொள்ளவும், அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர்  சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வர விடவும். இடைப்பட்ட நேரத்தில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து கொள்ளவும்.தாளித்த பொருட்கள் மற்றும் கொத்தமல்லி இலையை கூட்டில் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ளவும்.சத்தான  மற்றும் சுவையான செள செள கூட்டு தயார்.
குறிப்புக்கள் 

  • தேவைப்பட்டால் கடைசில் துருவிய தேங்காய் சிறுதளவு சேர்த்து கொள்ளலாம்.
  • தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்கும்.

Read more »

முருங்கைக்காய் கார குழம்பு | கார குழம்பு

முருங்கைக்காய் கார குழம்பு, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு குழம்பு வகை. சாதம் கூட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.கார குழம்பு வகைகளுக்கு நம்ம ஊர் நாட்டு காய்கறிகள் முருங்கைக்காய்,கத்தரிக்காய் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கும். இன்னைக்கு ஷேர் பண்ற கார குழம்பு ரெசிபியில் நான் முருங்கைக்காய் மட்டும் தான் பயன்படுத்தியுள்ளேன், உங்களுக்கு விருப்பட்டால் நீங்கள் இதே ரெசிபியில் முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காய் இரண்டையும் சேர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த  கார குழம்புக்கு தொட்டுக்க கூட்டு வகைகள் அல்லது வெறும் அவித்த முட்டை கூட அருமையாக இருக்கும். வாங்க சுவையான இந்த கார குழம்பை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

Murungakai Kara Kulambu

Preparation Time : 30 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் - 7 துண்டுகள் 
சின்ன வெங்காயம் - 4/ பெரிய வெங்காயம் -1/4
தக்காளி - 1
பூண்டு - 2 பல் 
புளி - நெல்லிக்காய்  அளவு 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு & உளுந்த பருப்பு - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன் 
சாம்பார் தூள் -1& 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 
அரைக்க தேவையான பொருட்கள் 
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் புளியை ஒரு 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்து வெங்காயம் மற்றும்  பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும் . ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு மற்றும் உளுந்தை தாளித்து கொள்ளவும்.அடுத்து வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பில்லை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.வெங்காயம் வதக்கிய பின் தக்காளி மற்றும் முருங்கைக்காயை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கவும்.அடுத்து மஞ்சள்,மிளகாய்,சாம்பார் தூள் மற்றும் உப்பை சேர்த்து எண்ணெயில் 2-3 நிமிடம் நன்கு வதக்கவும். பின்பு ஊற வைத்த புளியை கரைத்து புளி சாறை கடாயில் விடவும்.நன்கு கொதி வரும் வரை காத்திருக்கவும். அதற்கிடையில் அரைக்க தேவையான பொருட்களை தண்ணீர் சேர்த்து  நன்கு நைசாக மிக்ஸில் அரைத்து எடுத்து கொள்ளவும்.  புளி தண்ணீர் கொதி வந்த பின் அரைத்த தேங்காயை சேர்த்துக்கொள்ளவும்.எண்ணெய் மேலே மிதக்கும் வரை குழம்பை மெல்லிய தீயில் கொதிக்க விடவும்.சுவையான  முருங்கைக்காய் கார குழம்பு தயார்.
குறிப்புக்கள் 
  • குழம்பை தீயிலிருந்து இறக்கும் முன் முருகைக்காயை வெந்திருக்கானு பார்த்து கொள்ளவும்.
  • குழம்பு நல்ல நிறமாக வர நல்ல பழுத்த தக்காளி மற்றும் நல்ல தரமான மிளகாய் தூளை பயன்படுத்தவும்.

Read more »