Saturday, August 11, 2018

மீன் குழம்பு | சங்கரா மீன் கூட்டு | Fish Kuzhambu

மீன் குழம்பு/கூட்டு , ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான மீன் குழம்பு. இந்த குழம்பு எங்க வீட்டில் தலைமுறையாக செய்து வரக்கூடிய ஒரு ரெசிபி.ரொம்ப கம்மியான பொருட்களை கொண்டு செய்யக்கூடிய ஒரு சூப்பர் மீன் குழம்பு.இன்னைக்கு ரெசிபில் நான் சங்கரா மீனை இந்த குழம்புக்கு பயன்படுத்துள்ளேன்,ஆனால் நீங்க முள்ளு கம்மியா இருக்குற எந்த மீனையும் இந்த குழம்புக்கு பயன்படுத்தலாம். மீன் குழம்பை பொறுத்தவரை புளிப்பு ,கரம் மற்றும் உப்பு இந்த மூன்றும் சரியாக இருந்தால் போதும் மீன் குழம்பு அட்டகாசமாக இருக்கும்.அதனால் நீங்க மீனை குழம்பில் போட்டும் முன்பு புளிப்பு ,கரம் மற்றும் உப்பு இந்த மூன்றும் சரியாக இருக்குதுனு ருசி பார்த்துவிட்டு அப்புறம் மீனை போட்டுங்க, எதுவும் கூட குறைய தேவைப்பட்டால் மீனை போட்டும் முன்பே சரி பண்ணிக்கோங்க, மீனை போட்ட பின்பு மிளகாய் தூள் அல்லது புளி கரைசல் சேர்த்தீங்கனா அதனுடைய பச்சை வாசம் போகுறதுக்குள்ள மீன் ரொம்ப வெந்து குழம்புடன் கரைந்து விடும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருந்தாலே போதும் சூப்பரான மீன் குழம்பு நீங்களும் செய்யலாம் .வாங்க இப்போ எப்படி இந்த மீன் குழம்பு செய்றதுன்னு பார்க்கலாம்.

மீன் குழம்பு | சங்கரா மீன் கூட்டு | Fish Kuzhambu

Preparation Time : 30 mins | Cooking Time : 20 minsServes : 2-3 
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
சங்கரா மீன் - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம்  -15
தக்காளி - 1
புளி - சிறு எலுமிச்சை பழம் அளவு 
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 & 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - 1 கொத்து 
அரைப்பதற்கு 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2

செய்முறை
முதலில் புளியை ஒரு 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.தேவையான சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து கொள்ளவும்.வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெயை சூடு பண்ணிக்கொள்ளவும்.அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பின் அதில் புளி கரைசலை சேர்க்கவும்.பின்பு மஞ்சள் ,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.நன்கு கலந்து கொதி வரவிடவும். இதற்கிடையில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.அரைத்த தேங்காய் விழுதை கடாயில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.பின் அதில் மீனை சேர்த்து லேசாக கலந்து விட்டு மூடி வைத்து 5-8 நிமிடம் மீனை வேகவிடவும்.சூப்பர் மீன் குழம்பு/கூட்டு தயார்.
குறிப்புக்கள் 

  • சின்ன வெங்காயம் இந்த குழம்புக்கு நல்ல சுவையை கொடுக்கும்,அதனால் முடிந்தளவு அதே பயன்படுத்துங்கள்.
  • மீனை குழம்பில் போட்ட பிறகு ரொம்ப கரண்டியால் கிளற வேண்டாம் இல்லையென்றால் மீன் உடைந்து விடும்.

Read more »

Wednesday, August 8, 2018

அத்திப்பழம் மில்க் க்ஷேக் | Fig Milkshake

அத்திப்பழம் மில்க்க்ஷேக் , ரொம்ப எளிதாக செய்யக்கூடிய ஹெல்த்தியான ஒரு சூப்பர் மில்க்க்ஷேக்.அத்திப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான முக்கியமான வைட்டமின்ஸ் நிறைய இருக்கு,அதனால் அதனை கூடுமானவரை நமது உணவில் சேர்த்து கொள்வது ரொம்ப நல்லது.அதுவும் வளரும் குழந்தைகளுக்கு அத்திப்பழம் ரொம்ப நல்ல ஒரு உணவு. ஆனால் அத்திப்பழத்தை அப்படியே கொடுத்தால் எல்லாரும் சாப்பிட கொஞ்சம் கஷ்டப்படுவாங்க, அதற்குப்பதிலாக இப்படி மில்க்க்ஷேக் செய்து கொடுத்து பாருங்க,கிளாஸ் இப்படி காலி ஆச்சுன்னு ஆச்சரியப்படுவிங்க.வாங்க இப்போ அத்திப்பழம் மில்க்க்ஷேக் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

அத்திப்பழம் மில்க் க்ஷேக் | Fig Milkshake

Preparation Time : 20 mins | Cooking Time : 0 minsServes :
Recipe Category: Drinks | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
அத்திப்பழம் - 6
சூடு தண்ணீர் - 1/2 கப் 
பால் - 1 கப் 
தேன் - தேவையானளவு 


செய்முறை
முதலில் சூடு தண்ணீரில் அத்திப்பழத்தை ஒரு 20 நிமிடம் ஊறவைக்கவும். பின் ஊறவைத்த தண்ணீருடன் அத்திப்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு உடவே தேவையானளவு தேன் சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.அடுத்து தேவையானளவு பால் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு மிக்ஸில் அடித்து கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான அத்திப்பழம் மில்க்க்ஷேக் தயார். 
குறிப்புக்கள்:
  • அத்திப்பழத்தை ஊறவைப்பதால் ரொம்ப சுலபமாக அரைத்து கொள்ள முடியும்
  • அத்திப்பழம் நன்கு இனிப்பாக இருந்தால் தேன் கூட தேவையிருக்காது,அத்திப்பழம் இனிப்பே போதுமானதாக இருக்கும்.
  • தேனுக்கு பதில் சர்க்கரை கூட சேர்த்து கொள்ளலாம்.



Read more »

Tuesday, August 7, 2018

பீட்ரூட் தயிர் பச்சடி | பீட்ரூட் ரைதா | Beetroot Raita

பீட்ரூட் தயிர் பச்சடி /பீட்ரூட் ரைதா, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் தயிர் பச்சடி. இது  வெஜ் பிரியாணி மற்றும் புலாவ்-வுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி வெயில் காலத்தில் இதை அப்படியே கூட சாப்பிடலாம், வெயிலிற்கும் நல்லது மற்றும் உடலையும் கூலாக வைக்க உதவும்.ஒரே மாதிரி  பிரியாணி-க்கு வெங்காய தயிர் பச்சடி செய்து போர் அடிக்குதா கொஞ்சம் வித்தியாசமாக இந்த பீட்ரூட் தயிர் பச்சடி செய்து பாருங்க. இது டிபன் பாஸ்-க்கு குடுத்து விட ரொம்ப ஏதுவானது ஏனென்றால் வெங்காய தயிர் பச்சடி-யில்  வெங்காயம் சேர்ப்பதால் அதுனுடன் வாசம் ரொம்ப அதிகமா இருக்கும் அது சில பேருக்கு பிடிக்காது அவர்களுக்கு இந்த பீட்ரூட் தயிர் பச்சடி ஒரு நல்ல மாற்று. வாங்க எப்போ இந்த சுவையான பீட்ரூட் தயிர் பச்சடி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பீட்ரூட் தயிர் பச்சடி | பீட்ரூட் ரைதா | Beetroot Raita

Preparation Time : 1 hr | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
துருவிய பீட்ரூட் - 1/2 கப் 
தயிர் - 1/2 கப் 
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு & உளுந்து - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 
கறிவேப்பில்லை - சிறுதளவு 


செய்முறை
துருவிய பீட்ரூட் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-யை எடுத்து கொள்ளவும் . ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து கொள்ளவும்.
அடுத்து துருவிய பீட்ரூட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும். பீட்ரூட் வெந்து பச்சை வாசனை போன பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும்.
தயிரை ஒரு கிண்ணத்தில் போட்டு உப்பு சேர்த்து நன்கு கட்டியில்லாமல் அடித்து கொள்ளவும். அதில் பீட்ரூட்-யை சேர்த்து கலந்து கொள்ளவும்.
சுவையான  பீட்ரூட் தயிர் பச்சடி /பீட்ரூட் ரைதா  தயார். குறிப்புக்கள்: 
  • நேரம் ஆக ஆக பீட்ரூட் ரைதா கலர் அடர்த்தியாகும்.
  • பீட்ரூட் ஆறியபின் தயிருடன் சேர்க்கவும்.
  • பீட்ரூட் தயிருடன் கலந்து ஒரு 30 நிமிடம் கழித்து பரிமாறவும்.

Read more »

Friday, August 3, 2018

வாழைக்காய் புட்டு |வாழைக்காய் பொடிமாஸ் | Vazhakkai Podimas

வாழைக்காய் புட்டு/பொடிமாஸ் , எளிதாக வாழைக்காயை கொண்டு செய்யக்கூடிய ஒரு சூப்பர் சைடு டிஷ். இந்த வாழைக்காய் பொடிமாஸ் திருநெல்வேலி பக்கம் ரொம்ப பிரபலம், இது சாம்பார் மற்றும் கார குழம்பு வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும். புட்டு-னு பெயரை பார்த்தவுடன் ஏதோ ஸ்வீட் டிஷ் -னு நெனைச்சுடாதீங்க,எங்க ஊரு பக்கம் எதை துருவி செய்தாலும் அதற்கு புட்டு தான் பெயர் இருக்கும், வாழைக்காய் புட்டு,கேரட் புட்டு,உருளை புட்டு இப்படினு பல. எல்லாமே துருவி செய்யக்கூடிய பொரியல் வகைகள்,அவ்வளவுதான்.எப்போதும் செய்யும் வாழைக்காய் வருவலுக்கு பதிலாக கொஞ்சம் வித்தியாசமாக இந்த வாழைக்காய் பொடிமாஸ்-யை ஒரு நாள் செய்து பாருங்கள். வாங்க எப்போ வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

வாழைக்காய் பொடிமாஸ் | Vazhakkai Podimas

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Accompaniment | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
வாழைக்காய் -1
வெங்காயம் - 1(சிறியது )
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
கடுகு மற்றும் உளுந்த பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பில்லை - சிறுதளவு 
துருவிய தேங்காய்  - 1 & 1/2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் வாழைக்காய் மூழ்கும் வரை தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் வாழைக்காயை போட்டு ஒரு 8-10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.வெந்தபின் தண்ணீரிலிருந்து வாழைக்காயை எடுத்து ஒரு தட்டில் நன்கு ஆறவிடவும். நன்கு ஆறிய பின் அதன் தோலை உரித்து வாழைக்காயை துருவிக்கொள்ளவும்.துருவிய வாழைக்காயில் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை  மெலிதாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி,சூடான பின் அதில் கடுகு மற்றும் உளுந்த பருப்பை தாளித்து கொள்ளவும். அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பில்லை கூடவே சிறுது உப்பு  சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.வதங்கிய பின் அதில் துருவிய வாழைக்காயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ஒரு மூடியால் 2 நிமிடம் மூடி வேகவிடவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.சுவையான வாழைக்காயை பொடிமாஸ் /புட்டு தயார்.
குறிப்புக்கள் 
  • வாழைக்காயை நன்கு ஆறிய பின் துருவிக்கொள்ளவும், இல்லையென்றால் குழைந்து போய்விடும்.
  • வாழைக்காயை நன்கு வெந்தால்தான் தோல் உரிக்க எளிதாக வரும்.
  • சின்ன வெங்காயம் இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ளவும்.

Read more »

Wednesday, August 1, 2018

முட்டை குருமா | Egg Kurma

முட்டை குருமா, அவித்த முட்டையை கொண்டு செய்யக்கூடிய ஒரு சூப்பர் கிரேவி. இது சாதம் மற்றும் டிபன் ஐட்டமுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அவித்த முட்டை தயாராக இருந்தால் ஒரு 15-20 நிமிடத்தில் இந்த குருமாவை செய்துவிடலாம். வெறும் சாதத்தை விட, நெய் சோறு மற்றும் தேங்காய் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும், அதை போல் சப்பாத்தி கூட சாப்பிடவும் அருமையாக இருக்கும். வாங்க இப்போ இந்த சுவையான முட்டை குருமா எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

முட்டை குருமா | Egg Kurma

Preparation Time : 10 mins | Cooking Time : 15 minsServes :
Recipe Category: Curry | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது  - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 to 4
பட்டை - 1/2 அங்குலம் துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து 
கொத்தமல்லி இலை - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப
அரைப்பதற்கு 
துருவிய தேங்காய் - 1/4 கப் 
முந்திரி பருப்பு - 4
சோம்பு  - 1/2 டீஸ்பூன் 

செய்முறை
முதலில் முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை  பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு  வாணலில் எண்ணெய்யை காய வைத்து பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை போடவும், வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கொரகொரவென்று அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கும் நேரத்தில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்த தேங்காயை மஞ்சள் தூள் மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்க்கவும். தேவையானளவு உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக அவித்த முட்டையை சேர்த்து மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சுவையான முட்டை குருமா ரெடி 

குறிப்புக்கள் 
  • தேங்காய் எண்ணெய் இந்த குருமாவுக்கு நல்ல மணத்தையும்,சுவையும் கொடுக்கும்.
  • தேவைப்பட்டால் 1/2 டீஸ்பூன் கசகசா தேங்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • அதைப்போல் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.

Read more »

Sunday, July 29, 2018

பீட்ரூட் புலாவ் | பீட்ரூட் சாதம் | Beetroot Rice | Beetroot Pulav

பீட்ரூட் புலாவ், சுவையான,சத்தான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ்.வேகவைத்த சாதம் இருந்தால் போதும்,ஒரு 20 நிமிடத்தில் இந்த பீட்ரூட் புலாவை செய்து விடலாம். குட்டிஸ் லஞ்ச் போஸ்-க்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு புலாவ், பார்ப்பதற்கும் அட்டகாசமாக இருப்பதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இதற்கு சைடு டிஷ் கிரேவி எதுவும் தேவையில்லை சிம்பிளா ஒரு வெங்காய தயிர் பச்சடி இருந்தாலே  போதும். வாங்க இப்போ இந்த பீட்ரூட் புலாவ் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

பீட்ரூட் புலாவ் | பீட்ரூட் சாதம் | Beetroot Rice | Beetroot Pulav

Preparation Time : 10 mins | Cooking Time : 20 minsServes :
Recipe Category: Rice | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பீட்ரூட்  - 1 கப்(துருவியது )  
வேகவைத்த பாசுமதி அரிசி  - 2 கப்
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
லெமன்  -1/2 
கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன் 
கொத்தமல்லி  - ஒரு கைப்பிடி 
கறிவேப்பில்லை - 1 கொத்து
முந்திரி பருப்பு - 4/5 
பட்டை - 1/2 அங்குல துண்டு 
கிராம்பு - 3
ஏலக்காய் - 1
பிரியாணி இலை -1
எண்ணெய் -2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் பீட்ரூட்யை துருவி கொள்ளவும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை  மெலிதாக அரிந்து கொள்ளவும்.ஒரு வாணலில் எண்ணெய்  சேர்த்து அது சூடானபின் அதில் பட்டை,கிராம்பு,பிரியாணி இலை  மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு 30 நொடி வதக்கி கொள்ளவும்.பின் அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அடுத்து  வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ,வெங்காயம்  பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு பீட்ரூட் வேகும் வரை வதக்கி கொள்ளவும்.வேகவைத்த அரிசியை கொஞ்சம் நேரம் ஆறவிடவும். பீட்ரூட் வெந்த பின் அதில் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு,வேகவைத்த சாதம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தை மெதுவாக எல்லாம் ஒன்றாக சேரும்வரை கிளறி விடவும்.கடைசியாக கொத்தமல்லி இலையை மேலே தூவி கொள்ளவும்.சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் புலாவ் ரெடி !!! வெங்காய தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.
குறிப்புக்கள்
  • மிதமாகி போன சாதம் கூட இதற்கு பயன்படுத்தலாம்.
  • பீட்ரூட் இனிப்புக்குக்கேற்ப பச்சை மிளகாய் கூடவோ அல்லது குறையவோ சேர்த்து கொள்ளலாம்.
  • விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் நெய் கூட சேர்த்து கொள்ளலாம்,அது இன்னும் சுவையாக இருக்கும்.
Read more »