Friday, November 2, 2018

பாதுஷா | Badusha | Deepavali Sweet

பாதுஷா,ஒரு சுவையான இனிப்பு வகை. சாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு ஸ்வீட்!!! மற்ற இந்திய இனிப்புகள் போல் ரொம்ப ஸ்வீட் இல்லாமல்,லேசான இனிப்புடன் நன்கு மிருதுவாக இருக்கும். வரும் தீபாவளிக்கு இந்த பிரமாதமான பாதுஷாவை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நிறைய பேர் நினைப்பது போல் இதனை செய்வது ஒன்றும் கஷ்டமில்லை,ரொம்ப சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்துவிடலாம். வாங்க இப்போ இந்த சுவையான பாதுஷாவை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.   

பாதுஷா | Badusha | Deepavali Sweet

Preparation Time : 10 mins | Cooking Time : 25 minsMakes : 10 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப் 
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை 
உப்பு - ஒரு சிட்டிகை 
சர்க்கரை - 1 டீஸ்பூன் 
தயிர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - பொரிப்பதற்கு 
சர்க்கரை பாகுக்கு தேவையானவை 
சர்க்கரை -1/2 கப் 
ஏலக்காய் - 2
குங்குமப்பூ - சிறுதளவு 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவையானளவு 


செய்முறை
முதலில் வெண்ணையை உருக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும், கூடவே 1 டீஸ்பூன் எண்ணெய் & சர்க்கரை , பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து அதில் மைதா மாவை சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ளவும்.பின் தேவையானளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து கொள்ளவும், ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுத்து சர்க்கரை பாகு-க்கு தேவையான சர்க்கரை மற்றும் மூழ்கும் வரை தண்ணீர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதி வரவிடவும்.சர்க்கரை கரைந்து ஒரு கம்மி பதம் வரும் வரை கொதிக்க விடவும்,பின் அடுப்பை அணைத்து அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கடைசியாக குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து கொள்ளவும். அடுத்து மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்,பின் அதன் நடுவில் ஒரு ஓட்டை போட்டு கொள்ளவும்.பொரிப்பதற்கு எண்ணெய் காய வைத்து கொள்ளவும், பின் அதை மெல்லிய தீயில் வைத்து பாதுஷா-வை போட்டு பொரித்து எடுக்கவும்.இரண்டு பக்கமும் நன்கு சிவந்து வரும் வரை வேகவிட்டு எடுத்து உடனே சர்க்கரை பாகில் போடவும்.ஒரு இரண்டு நிமிடம் சர்க்கரை பாகில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இதே மாதிரி அனைத்தையும் பொரித்து எடுத்து சர்க்கரை பகலில் போட்டு எடுத்து கொள்ளவும்.சுவையான மற்றும் மிருதுவான பாதுஷா தயார்.
குறிப்புக்கள் 
  • பாதுஷா-வை மெல்லிய தீயில் தான் பொரிக்க வேண்டும் , அப்போதுதான் உள்ளவரை நன்கு வேகும்.
  • சர்க்கரை பாகு இடையில் கெட்டியாக ஆகிவிட்டால் மீண்டும் லேசாக சூடுபடுத்தி கொள்ளவும்
  • குங்குமப்பூ இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் தேவையில்லை அதனை விட்டுவிடலாம்.

No comments:

Post a Comment